பக்கம் எண் :

270


"பொறுப்புடைய பதவியினி லிருப்போர் யாரும்   

      புறவாழ்வில் பிறர்தயவைப் புறக்க ணித்து

இருப்பதுதான் சிறப்பாகும்!" என்றார் யூசுப்,    

      ‘இந்நிலையை என்றைக்கும் காப்போம்!’ என்று

விருப்பமொடு உரைத்திட்ட மிசுரின் வேந்தர்   

      விரைவாக அகன்றிட்டார், அனைத்தும் கண்டு

பெருமையுற்ற சுலைகாவும் புன்ன கைத்துப்     

      பிள்ளைகளை இறுகணைத்து முத்தம் தந்தாள்.

 

‘உன்முத்தப் பரிசிலினும் உயர்ந்த ஒன்றை        

      உலகத்தில் எவர்தருவார்?’ என்றார் யூசுப்

‘கண்பொத்தும் விளையாட்டில் களித்தி ருந்தக்     

      களத்தினிலே விளைந்த’தென சுலைகா சொன்னாள்

தன்னருகில் மைந்தர்களைக் கிடத்து மாறு        

      சைகையினால் தாதியரைப் பணித்தார் யூசுப்,

என்கரத்தில் இளையவனைத் தருவீர்’ என்று     

      இடதுபுரம் சுலைகாவும் திரும்ப லானாள்.

 

‘கண்மணிகள் இருவரிலும் உங்கள் உள்ளம்           

      கவர்ந்தவனைக் கூறிடுக!’ என்று கேட்டாள்,

கண்ணிரண்டில் ஒன்றினிலே காந்தம் என்னும்         

      கற்பனையை நீக்கிடுக!’ என்றார் யூசுப்.

‘என்னிதயம் இளையவனே கவர்ந்தா’னென்று           

      ஏந்திழையாள் சுலைகாவே இயம்பக் கேட்டு

தன்னிலையை நினைந்திட்ட யூசுப், அன்பு          

      ததும்பிடவே கரம்பற்றிக் கூற லானார்:

 

"பெற்றவரின் தனியன்பால் பிறந்தோ ருள்ளே          

      பெரும்பகைமை தோன்றியதும், பொறாமைப் பேயால்

குற்றமற்ற சோதரனைக் கிணற்றில் தள்ளிக்           

      கொன்றுவிடத் தூண்டியதும் அறிந்தா யானால்

பெற்றெடுத்த இருவரிலே ஒருவன் மீதில்            

      பேரன்பு கொள்ளுவையோ?" என்ற யூசுப்

பற்றழித்தத் துறவியைப்போல மைந்தர் நோக்கிப்     

      ‘பகையின்றி வாழ்ந்திடுவீர்!’ என்றும் சொன்னார்.

  - - x - -