வளமும் வறட்சியும் இயல்-55 பருவம் பார்த்துப் பதம் பார்த்துப் பள்ளம் மேட்டைச் சரிபார்த்து மருவும் மாசும் நீக்கிடவே மணியாய் விதைகள் கைபார்த்து தருமம் காக்கும் நில மகளைத் தழுவி யுழுது நீர் பாய்ச்சி திருவாய்ச் செழுமை பெருக்கிடவே சேர்ந்தே செய்தனர் விவசாயம்! விதைத்த விதையின் முளை பார்த்தே விளையும் பயிரின் தரம்பார்ப்போர் புதைந்த வித்தின் முகம் திறந்தே பூரித் துயரும் பயிர் முனையில் வதைக்கும் பஞ்சம் வரும் முன்னே வளத்தைச் சுமந்து எழப் பார்த்தே எதையும் தாங்கும் உறுதியினை இதயம் நிறைத்துத் தலைநிமிர்ந்தார். பசுமை முற்றிக் கதிர் வெடித்துப் பசியைப் போக்கும் மணிச்சரமாய் அசைந்தே ஆடும் பயிர் வளத்தை அறிந்தே மகிழும் நல்லுழவர் இசையும் கூத்து மிட்ட வராய் இளமை துள்ளும் உணர்வுடனே பசியும் பஞ்சமும் வென்ற வராய்ப் பாடிப் பரவச முற்றனரே ! |