தூத்துக்குடி வ. உ. சி. கல்லூரி முதல்வரும் சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான அ . சீனிவாசராகவனாரின் தீர்ப்பு! பெருமை மிகுந்த யூசுப்பின் பெண்ணின் நல்லாள் சுலைகாவின் அருமைக் கதையின் தமிழ் வடிவை அன்போ டெனக்கு நீ அளித்த உரிமை போற்றி அந்நூலை ஓதி மகிழ்ந்தேன், உளம் சிலிர்த்தேன்! அருமைத் தமிழுக் கணியாகும் ஆர மென்றே அறிந்திட்டேன். யூசுப் நபியின் வரலாற்றில் உள்ள நீதி பலவென்றே பேசும் இறைவன் குரல் கேட்டாய் பேணி அந்த உண்மையினை தேசு மிகுந்த சொன் மலரால் சிறந்த பாடல் தொடுத்திட்டாய். ஆசில் அறத்தை அழகுணர்வை அன்பைக் கண்முன் அமைத்திட்டாய்! உவமை நயமும் ஒலி நயமும் உணர்ச்சிக் கடலாய் ஓங்குவதும், அவமே களையும் பண்பாட்டில் ஆழ்ந்து கதையொன் றலர்வதுவும் நவமாம் தமிழும் நற்கவிதை நலனும் திரண்டே ஒன்றாதல் தவமே யன்றோ அத்தவம் நீ தந்த யூசுப் சுலைகாவே! பாரதி அகம் 15-4-60 | அன்புடன் அ. சீனிவாசராகவன | |