கொடுக்கும் விதைகளும் பாழாகும், குடிகளின் உழைப்பும் வீணாகும்; அடுக்கும் பஞ்சம் ஏழாண்டு ஆட்டி வைப்பது மெய்யாகும்! தடுக்கும் செயலாய் நினையாமல் தக்கது செய்திடப் பணித்தீரேல் எடுக்கும் முடிவை அனைவருமே ஏற்றிடச் செய்வீர்!" எனச் சொன்னார். "தொட்டது துலங்கச் செய்வதிலே தோன்றலா யிலங்கும் என்னமைச்சே, இட்டதைச் செய்யும் ஏவலராய் இந்நாட்டவரே இயங்கிடவே கட்டளை யிட்டே பல்லாண்டு கடந்து போயின, எம்பணியைச் சுட்டுக செய்வோம்!" என்றரசர் சொன்னதும் யூசுப் துடித்தெழுந்தார்! வேறு "வளத்தின் முடிவும் வறட்சியின் தொடக்கமும் நிலத்தின் செழுமையை நெருப்பென தீய்ப்பதை உளத்தால் நினைக்கவே உடலமே சிலிர்க்குது! பலத்தினா லன்றிநற் பண்பினால் மக்களின் நலத்தினைக் காத்திட நாட்டினர் ஏற்பதாய் வளத்தினை மீட்டிடும் வரையிலும் தானியக் களஞ்சியம் சேர்த்ததைக் கடும்பசிக் குதவிட சிலமுறை வகுத்துச் செயல்முறை தொகுத்திட நினைக்கிறே னென்று!" நிகழ்த்தினார் யூசுப், "நினைப்பதை இன்றே நிகழ்த்திட இங்கே தடுப்பவ ருண்டுமோ சாற்றுக, நாட்டைக் கெடுப்பவ ருண்டெனில், கொடுப்பீர் தண்டனை!" என்றனர் மன்னரே, யூசுபு மகிழ்ந்து சென்றனர் மனைக்கே, செம்மலும் பிரிந்தார். |