இயற்கையின் சீற்றம் இயல்-56 களைபறித்துத் தழைபறித்துக் கதிர்பறிக்கும் நாள்பார்த்துக் காத்தி ருந்தோர் உளம்பறித்து வளம்பறித்து உயிர்பறித்துப் போகும்மழை ஓய்ந்தி டாமல் நிலமரித்துக் கடல்சேர்க்கும் நெடும்வாய்க்கா லாக்குவித்த நிலையைக் கண்டு நலமிழந்தப் பெருமக்கள் நல்லமைச்சர் யூசுபினை நாடிச் சென்றார்! பண்பட்டப் பேருழைப்பால் பயன்பட்ட நல்லுழவர் பஞ்சத் தாலே புண்பட்டுப் போகுமுனம் பொருள்தட்டை அமைச்சரிடம் புகல்வ தற்கும், முன்பட்டக் கடன்தீர்க்க முடியாதப் பேரிழப்பை மொழிவ தற்கும் கண்பட்ட தூரம்வரைக் காத்திருக்கும் மக்களினைக் கண்டார் மன்னர். உணவிழந்து - உடையிழந்து, உயிரிழந்து போகாமல் ஒளி இழந்து மனமிடிந்து நிற்கின்ற. மக்களது பெருந்துயரை மாற்று தற்கு தனமளித்து உடையளித்து சேமித்த தானியத்தின் சுமையும் தந்து "கனவுகண்ட கொடும்பஞ்சம் தொடங்கியது" எனயூசுப் கண்ணீர் விட்டார். |