பக்கம் எண் :

275


உடைவேண்டி வந்தவரும் உணவுக்கு

      வந்தவரும் உவகை கொள்ளக்

கொடையீந்த பேரமைச்சர் கருணையினைக்  

      கண்டொருவர் குறுகி நின்று

"தடையில்லை என்பீரேல் என்னில்லம்

      வைத்துள்ள தானி யங்கள்

கொடையாக ஈந்திடுவேன்!" என்றிட்டார்

      அதுகேட்டுக் கொதித்த யூசுப்:

 

"கொடுப்பவரைத் தடுப்பவரே, கொடுக்காம

      லிருப்பவரின் கொடியோ ரென்றும் -

கெடுப்பவரின் தலைவரெனக் கொடுநரகில்

      முதியவராய்க் கிடப்போ ரென்றும்

சுடுமொழியால் என் முன்னோர் கூறியதை

      நினைக்கின்றேன்; சொன்னதே போல்

கொடுக்கின்ற அளவுக்குச் சேமித்தீர்

      என்றக்கால் குற்றம்!" என்றார்.

 

          வேறு

 

"தேவையைக் குறைத்து மீதம்

     செய்ததைச் சேர்த்த தல்லால்

தேவைக்கும் அதிக மாகச்

     சேமித்த தல்ல" வென்றார்.

"தேவையிற் செய்த மீதம்

     தேசத்தின் சேமிப் பாக்கும்

சேவையில் மக்க ளெல்லாம்

     செயல்படச்" சொன்னார் யூசுப்.

 

"உற்றவர் உறவோர் என்று

     உரியவர் தருவா ராயின்

குற்றமாய் விடுமோ?" என்று

     கோரினார் ஒருவர், "தானம்

பெற்றவர் அரசி டத்தும்

     பெறுவதைத் தடுக்கும் மார்க்கம்

அற்றதால் குற்றம்!" என்றே

     அறவுரை புகன்ற யூசுப்: