"உடலினை வளர்ப்ப தற்கே உணவெனும் உணர்வு கொண்டு குடலினை நிரப்பி வாழ்ந்த குணத்தினை மாற்றி வாழும் கடமைக்கே உணவு என்னும் கருத்தினைச் செயலிற் கொண்டால் தொடங்கிய பஞ்ச காலத் துயரினை வெல்வோ" மென்றார். "ஒருவரின் உணவை மூவர் உண்டுயிர் வாழக் கூடும், இருவரின் உணவை யுண்ண இயன்றவர் எவரு மில்லை! வருவது வரட்டு மென்று வாழ்ந்திடில் வறட்சித் துன்பம் பெருகிடல் திண்ணம்!" என்று பெருந்தகை யூசுப் சொன்னார். வேறு "தானமதாய் தருவதையே உண்டு றங்கும் தலைகுனிவைத் தாராமல் உழைத்து வாழ ஊனமுற்ற எம்நிலத்தை ஒழுங்கு செய்து உணவுப்பொருள் விளைவிக்க உதவு வீரேல் ஆனமட்டும் பயிர்விதைத்து விளையு மட்டும் அடுத்தவர்க்கும் வழங்கிடுவோம், நெடுநாள் காத்த மானமொடு வாழ்ந்திடுவோம்!" என்றே அங்கு மற்றொருவர் உரைத்திட்டார் துடித்தார் யூசுப் "உழைத்துண்ணும் உணவினிலும் உயர்ந்த ஒன்றை உண்பதற்கு ஏதுமிலை, உழைப்பி னாலே பிழைத்திருக்கும் பேருணர்வு படைத்த மக்கள் பெருமையினும் மேலான பெருமை இல்லை! உழைப்பினுக்கு உரியபயன் கிட்டாப் போதில் உண்டாகும் துயருக்கும் உறுத்த லுக்கும் இழப்பினுக்கும் அஞ்சுகிறேன்!" என்ற யூசுப் ‘ஏழாண்டு பொறுத்திருப்போம்! என்றும் சொன்னார். |