பக்கம் எண் :

277


"பொறுத்திருக்கும் ஏழாண்டும் புசித்தி ருக்கப்

      போதியதாய் தானியங்கள் களஞ்சியத்தில்

நிறைத்துள்ளோம் என்றாலும் மக்கள் காக்கும்

      நேர்மையினா லன்றிப்பசி நீக்கும் மார்க்கம்

குறைந்துள்ள தென்பதனால் தேவைக் கேற்ப

      கொடுப்பதற்கே முயல்கின்றோம்!" என்ற யூசுப்

"மறைத்துள்ள தானியங்கள் அளவை நீவிர்

      மனமொப்பிக் கூறிடுவீர்!" என்றும் சொன்னார்.

 

"பதுக்கிவைத்துப் பொய்யுரைப்போ ரெவரென்றாலும்

      பகிரங்க தண்டனைக்கு உரியோ ராவர்;

பதுக்காமல் மெய்யுரைப்போர் சமுதா யத்தின்

      பசிக்கொடுமை போக்குவித்த வள்ள லாவர்!

பொதுநலத்தில் சுயநலத்தைப் புகுத்தி டாமல்

      பொறுப்பேற்கும் உணர்வுடைய இளைஞ ரெல்லாம்

பதுக்கலினை வெளிக் கொணரும் பணிக ளாற்றும்

      படையினிலே இணைந்திடுவீர்!" என்றார் யூசுப்

 

"புற்றிருக்கும் சிற்றெறும்பும் மழைகா லத்தில்

      புசிப்பதற்குத் தன் னுணவைச் சேர்த்து வைக்கக்

கற்றிருக்கும் உண்மையினைக் காணும் மக்கள்

      கடும்பசிக்குச் சேமித்தே வைத்தார் என்றால்

குற்றமெனக் கொள்ளவிலை, மறைத்து வைத்தல்

      கொடுங்குற்ற மென்கின்றேன்!" என்ற யூசுப்

கொற்றவரைக் கூர்ந்திட்டார், குறிப்ப றிந்து

      கோவேந்தர் குடிகள்முகம் பார்த்துச் சொல்வார்:

    

"வாடுகின்றப் பயிர்காத்து வளர்ப்ப தற்கே

      வந்துதவும் வான்மழையே நம்மை யெல்லாம்

வாடவைத்து, வளர்த்தபயிர் அழித்து விட்ட

      வன்கொடுமை நினைக்கின்றேன்; உழைத்து ழைத்து

ஓடவிட்ட வியர்வையது உலரு முன்னே &

      ஓழுகவிட்ட கண்ணீரைத் துடைப்ப தற்குப்

பாடுபடும் பேரமைச்சர் ஆணை காத்துப்

      பசிக்கொடுமை வென்றிடுவோம்!" என்றுரைத்தார்.