பக்கம் எண் :

278


"வென்றிடுவோம் பசிக்கொடுமை என்ப தெல்லாம்

      விளையாட்டாய் செய்வதல்ல, விதியின் சீற்றம்

குன்றுதற்கு ஏழாண்டு தியாக வாழ்வைக்

      கொண்டிருத்தல் அனைவரது கடமை யாகும்!  

ஒன்றுபட்டுச் செயலாற்றும் உறுதி யோடு

      ஓருயிரும் பஞ்சப்பேய் உண்டி டாமல்

நின்றிடுவோம் அணிவகுத்து!" என்றார் யூசுப்

      நெடுமூச்சு விட்டிருந்தோர் நிமிர லானார்.

 

"பாடுபட்டு உணவுதரும் பயிர் வளர்த்துப்

      பகிர்ந்தளித்த உழவரது பசியைப் போக்கல்

நாடுபட்டக் கடனாகும்; தானி யங்கள்

      நமக்களித்த விலையினுக்கே அவர்க்களிப்போம்!

பீடுபெறப் பிறதொழிலைப் புரிந்தோ ரெல்லாம்

      பெறுவதற்குத் தரும்விலையோ இருபங் காகும்;

ஈடுசெய்து வேறுபொருள் வழங்கு வாரேல்

      ஈந்திடுவோம் தானியங்கள்!" என்றார் யூசுப்.

 

"ஒருதிங்கள் வரையினிலும் கையிருப்பை

      உண்டிருப்பீர்; குடும்பங்கள் அளவைப் பார்த்து

மறுதிங்கள் முதலாகக் களஞ்சி யத்தில்

      வழங்குவதைப் பெற்றிடலாம்!" என்ற யூசுப்

‘ஓருதிங்கள் உணவினுக்கும் அதிகமுள் ளோர்

      ஒளிக்காமல் உரைத்திடுதல் வேண்டு’ மென்றார்.

"இருவாரம் முடிந்திடுமுன் எம்மிடத்தில்

      இருப்பதெல்லாம் தந்திடுவோம்!" என்றார் மக்கள்

                     வேறு

 

"பழகப் பழகப் பாலும் புளிக்கும்

      பழமொழி பயின்றிருந்தோம்;

பழகிப் பழகி வேம்பும் இனிக்கும்

      பயிற்சியை எமக்களித்தீர்!

பழகிப் பழகிப் பசியினைத் தாங்கும்

      பக்குவம் பெற்றுவிட்டாம்;

பழகிய வழியி லொழுகுவோ!" மென்று

      பகர்ந்தனர் மன்னவரே!