பஞ்சமும் பரிகாரமும் இயல்-57 வாழும் உயிர்கள் வான்பார்க்க வதைக்கும் வெப்பம் மண்பார்க்க சூழும் பஞ்சம் மாந்தர்களைத் துடிக்க வைத்தே சுவை பார்க்க தாழப் பறந்த புள்ளினங்கள் தாகம் தீர்க்கும் நீர்பார்த்து வீழப் பார்த்த வேடர்களோ வீசினர் வலையை விருந்தாக்க ! ஆடிக் களித்த மக்களினை அயரச் செய்யும் கொடும்பஞ்சம் தேடிச் சேர்த்த தனமனைத்தும் தின்று தீர்ந்தது முதலாண்டு ! வாடித் துடிக்க வைத்திடவே வந்திடும் இரண்டாம் ஆண்டினிலே சூடி யணிந்த பொருள்தந்தே சுமந்து சென்றனர் தானியமே ! எட்டிப் பார்த்துத் தம் தலையை இறங்கச் சாய்த்தப் பாற்பசுக்கள் முட்டிப் பார்க்கும் கன்றினுக்கு முடிந்த மட்டும் பாலூட்டி, கட்டி வைத்தே உணவிட்டுக் காத்து வளர்ப்போர் முகம்பார்த்து ஓட்டி யுலர்ந்த தம் வயிற்றின் உறுத்தலைக் காட்டக் கதறினவே ! |