பக்கம் எண் :

280


பஞ்சம் தொடங்கிய மூன்றாண்டைப்

      பார்த்தவர் தங்கள் பசியினிலும்

நெஞ்சைக் குடையும் பெருந்துயராய்

      நின்றது வளர்த்தக் கால்நடைகள் !

எஞ்சிக் கிடைத்த புற்பூண்டு

     எல்லாம் கருகிப் போனதினால்

மிஞ்சிய கால்நடை அரசிடமே

     விற்றுப் பெற்றனர் தானியமே !

 

பதுங்கித் தாக்கும் பசியரக்கன்

     பலத்தை யொடுக்கும் போர்முனையில்

வதங்கித் தவிக்கும் மக்களினை

      வாழச் செய்திடும் பெரும்பணிக்கு

முதன்மை தந்திடும் யூசுபினை

     முற்றுகை யிட்டன கால்நடைகள்;

இதனைக் காக்கும் பொறுப்பினையும்

     ஏற்றிட இசைந்தார் நல்லமைச்சர்.

 

காயும் நாளில் மழையாகிக்

     கதிரும் பயிரும் அழித்தவிதி

பேயும் நாளில் கொடும் வெயிலாய்

     பிறநாட் டினையும் சுட்டெரிக்கத்

தாயும் சேயும் தந்தையுமாய்

     தானியம் வாங்கிட மிசுரினுக்கே

மேயும் ஒட்டகை மீதமர்ந்தே

     வேற்றூர் மக்கள் வரலானார் !

 

பெரும்விலை தரினும், தானியங்கள்

     பிறநாட் டவர்க்கு விற்பதெனில்

ஒருமுறை மட்டிலும் வழங்கிடவே

     ஒப்புதல் தந்த பேரமைச்சர்

வருபவ ரிடையே கன்னானில்

     வாழ்பவர் எவரும் வந்தாரேல்

ஒருவரைத் தம்பால் அழைத்துவர

     உத்திரவிட்டே உளம் சோர்ந்தார்.

 

காயும் நாள் : கோடை காலத்தைக் குறிப்பது

பேயும் நாள் : மழை காலத்தைக் குறிப்பது.