நினைவின் நிழல் இயல்-58 பஞ்சத்தின் பெருநெருப்பு கிழக்கு மேற்காய் பரவுகின்ற தென்பதையே அறிந்த யூசுப் நெஞ்சத்தில் கன்னானின் நிலையைக் காண நினைத்திட்டார், நினைத்தவுடன் மனம் குலைத்து மஞ்சத்தில் புரண்டிட்டார்; மைந்த ரோடு மாதரசி சுலைகாவும் அங்கு வந்தே "பஞ்சத்தில் பாலகரைக் கொஞ்சி னாலும் பாபமென நினைத்தீரோ?" என்று கேட்டாள். பெற்றவரும் பிறந்தவரும் பஞ்சத் தாலே பீடிக்கப் பட்டனரோ என்ற எண்ணம் பற்றியதால் முற்றினிலும் தனைமறந்து படுக்கையிலே கண்பொத்திக் கிடந்த யூசுப் நற்றவத்து நாயகியின் குரலைக் கேட்டு நகைகாட்டி மைந்தர்களை இறுக ணைத்துப் "பெற்றவரை பிறந்தவரை நினைத்தேன்!" என்று பெருமூச்சு விட்டவராய் விண்ணைப் பார்த்தார். "பிறந்திட்ட கன்னானை மறந்திட் டாலும், பெற்றெடுத்த தாய்தந்தை மறந்தி டாமல் நிறைந்திட்ட பேரன்பில் நினைத்துப் பார்க்கும் நெஞ்சுடைய நாயகரே; உங்கள் கன்னான் குறைந்திட்ட தூரத்தில் இருக்கும் போது குற்றேவல் புரிபவரைப் பணித் திட்டாலும் விரைவினிலே பெற்றவரின் நிலைமை யாவும் விளங்கிடுமே!" எனவருந்தி சுலைகா சொன்னாள். |