உடன்பிறந்த சோதாரை, உயிரில் மேலாய் உவந்திட்ட தந்தையரைப் பிரிந்த நாளாய் தொடர்ந்திட்ட துன்பத்தைச் சொல்வ தென்றால் துயரத்தில் உன்றனையும் துடிக்க வைக்கும்! இடர்பட்ட காலமெலாம் என்னைக் காத்த இறைவிருப்பம் ஏதெனினும் ஏற்று வாழ்தல் கடனாகக் கொண்டுள்ளேன்!" என்றார் யூசுப் கலங்கிவிட்ட விழியாலே சுலைகா பார்த்தாள். "பெற்றவரே என்றாலும், பெற்றெடுத்தப் பிள்ளைகளே என்றாலும், வலிமை மிக்கக் கொற்றவரே என்றாலும் குற்றம் கண்டால் குனியாமல் எதிர்க்கின்ற வாய்மை யுள்ளம் பெற்றவராய் இறையருளைப் பெற்று வாழ்ந்த பெருமானார் இபுறாஹிம் நபியின் மார்க்கம் பற்றியவர் பஞ்சத்தால் பற்றி டாமல் பரம்பொருளை வேண்டுகிறேன்!" என்றார் யூசுப். "இரந்துண்டு வாழ்வதிலும் இறந்து போதல் ஏற்றமென நினைக்கின்ற உயர் குலத்தில் பிறந்திட்டச் சோதரர்கள் பிளவு பட்டுப் பிரிந்திட்ட பெரும்பிழையே புரிந்தா ரென்று மறந்திட்ட இறையவனே விரைவாய்ச் சேர்க்க மனமுருகி வேண்டுகிறேன்!’; என்ற யூசுப் நிறைந்திட்ட கண்ணீரைத் துடைத்த வாறு நெளிந்திட்ட உள்ளுணர்வை நிமிர்த்த லானார்! எண்ணாத எண்ணங்கள் எழுப்பி விட்ட இதயத்தைத் தன்னிலைக்குத் திருப்பி விட்டு பொன்னான இப்ராயீம் - மீஷாவோடு புன்னகைத்து மகிழ்ந்திருந்த யூசுப் நோக்கி "கன்னானி லிருந்து சிலர் வந்தா" ரென்று களஞ்சியத்தின் காவலனே கூறிநின்றான், "பின்னாலே வருகின்றேன், முன்னால் சென்று பேசிடுக!’ என்றுரைத்து நகர்ந்தார் யூசுப். - -x - - |