பக்கம் எண் :

283


யாக்கூபின் ஐயம்

இயல்-59

பொன்னொளி மங்கச் செய்யும்

      புன்னகை பொங்கும் யூசுப்

மின்னொளி போலத் தோன்றி

      விரைவினில் மறைந்த தெண்ணி

கண்ணொளி இழந்த யாக்கூப்

      கருத்தொளி இழந்தி டாமல்

தன்னொளி புன்யா மீனைத்

      தழுவியே கேட்க லானார் :

 

"பொன்னொடு பொருளும் கொண்டு

     போனவுன் அண்ணன் மார்கள்

இன்னமும் மிசுரை விட்டு

     ஏன்வர வில்லை?" என்ற

தன்னருந் தந்தை தம்மைத்

     தாங்கியே படுக்க வைத்து

‘என்னவோ அறியேன்!’ என்று

     இயம்பினார் புன்யா மீனே.

 

"நன்நிலை இழந்த போதும்

     நடுநிலை பிறழ்ந்த போதும்

தன்நிலை யழிவ தல்லால்

     தாமமும் பகைமை கொள்ளும்!

இந்நிலை யுனது மூத்தோர்

     எய்திடா தினிது காத்து

என்னிலே சேர்த்து வைக்க

     இறைஞ்சுவோம்!" என்றார் யாக்கூப்.