திருச்சி வானொலி நிலையத்தில் 23-10-77-ல் புத்தகச் செய்தியில் ஒலிபரப்பப்பட்ட விமர்சனம் "திருக்குர்ஆன் தனது 12-ஆவது அத்தியாயமாக யூசுப் (அலை) என்றும், பைபிள் ஆதியாகமம் 37-39இல் தொடங்கி 50 வரை முடியும் அதிகாரங்களில் ‘யோசேப்பு’ என்றும் குறிப்பிட்டுள்ள இறைதூதரின் சோதனைமிக்கக் காதல் வாழ்வைக் காவியமாகப் பாடியிருக்கும் கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனாரின் அற்புதச் சாதனைத் தமிழ்மொழிக்குக் கிடைத்தற்கரிய ஒரு கருவூலமாகும். உலகின் இருபெரும் வேதங்கள் குறிப்பிடுகின்ற நபி யூசுப் (அலை) அவர்களின் வாழ்வு வெறும் கற்பனைக் கதையல்ல; வரலாறாகும். ஒரு வரலாற்றை அதன் அடிப்படையிலிருந்து அணுவளவும் பிறழாமல், படிப்போர்க்குச் சிறிதளவும் சுவை குன்றாமல் பைந்தமிழில் காவியமாக வடித்துத் தருவது எத்துணைக் கடினமான காரியமென்பதை அறிவுலகம் நன்குணரும். இது படிப்பினை மிக்கக் காதல் காவியம். சுலைகா ஒரு அரசிளங் குமரி. பருவ வயதில் ஒரு இரவில் கனவொன்றைக் காணுகின்றாள். அதில் ஒரு சுந்தரனைச் சந்திக்கின்றாள். அவன் எத்தகையவன். காந்தமெனக் கவருகின்ற கடைக்கண் வீச்ச கடும் பகையும் அஞ்சுகின்ற தடந்தோள், உண்மைச் சாந்தமிகும் எழில் வதனம், கருணை பொங்கித் தவழுகின்ற கருவிழிகள், அகன்ற நெற்றி பாந்த மிகு விற்புருவம், நிமிர்ந்த நெஞ்சும் பார்த்திட்டேன், இவையன்றி எதோ ஒன்றைக காந்தனவன் பெற்றுள்ளான் அதையான் காணேன் கடவுளருட் பேரொளியென் றெண்ணு கின்றேன் என்று கூறிய சுலைகா மேலும் எதையாவது சொல்ல விட்டு விட்டோமா என நினைத்து...... |