பக்கம் எண் :

285


மவுன சந்திப்பு

இயல்-60

கன்னானி லிருந்துசிலர் வந்தா ரென்று

      களஞ்சியத்தின் காவலனே சொல்லக் கேட்டு

பின்னாலே விரைந்திட்ட அமைச்சர் யூசுப்

      பெற்றவரின் பிறந்தவரின் நிலையறிந்துத்

தன்னாலே திரும்பிடுவா ரென்று நம்பித்

     தவித்திருந்த சுலைகாவோ அவரைக் காணக்

கண்ணாலே தோழியிடம் ஆணையிட்டுக்

     காத்திருந்தாள், காத்திருந்தே களைத்துப் போனாள்!

 

"தருகின்ற தானியத்தைத் தந்த பின்னும்

     தனிமையினில் ஏதேதோ பேசிக் கொண்டு

இருக்கின்றார் பேரமைச்சர்!" என்ற வாறு

     எதிர்வந்தத் தோழியிடம் "இங்கே நானும்

இருக்கின்றேன் என்பதையே அமைச்ச ருக்கு

     இயம்பினையா?" எனக்கேட்டு என்றும் போலே

வருகின்ற வரையினிலும் விழித்திருக்கும்

     வழக்கத்தை மாற்றாமல் காத்திருந்தாள்!

 

காத்திருந்த சுலைகாவைத் தழுவு தற்குக்

     காத்திருக்க விரும்பாத இரவுத் தூக்கம்

நேத்திரத்தைப் பொத்துகின்ற இமைகள் தொட்டு

     நெட்டுயிர்க்கும் மேனியெலாம் தடவிவிட்டு

ஆத்திரத்தை ஆற்றுவதைக் கண்ட தோழி

     அமைச்சர்வரும் தகவலினைச் சொல்லி விட்டுப்

பாத்திரத்தில் பாலெடுத்து வந்தாள், யூசுப்

     பாசமொடு சுலைகாவின் பக்கம் வந்தார்.