இழப்பும் இருப்பும்! இயல்-61 நலமழிக்கும் பஞ்சத்தின் நான்காம் ஆண்டு நாட்டினரின் துயரத்தை அதிக மாக்க வளமிழந்தத் தம்நிலத்தை அரசுக் கீந்து வயிற்றுக்கு தானியமே வாங்கிச் சென்றார்! உளமிழந்து போகாமல் உயிரைக் காக்கும் உணர்வுபெற மக்களையே ஊக்கு வித்து வளமடையும் நாள்வரையும் பொறுமை காத்து வாழுகின்ற உறுதியினை வளர்த்தார் யூசுப்! ‘பொன்னில்லை - பொருளில்லை, ஆடு மாடும் போயிற்றே!’ என்றழுது புலம்பு வோரும்; ‘மண்ணில்லை, இருந்ததையும் விற்றுவிட்டு வயிற்றைத்தான் வளர்த்திட்டோம்!’ என்ற பேரும் தன்னில்லம் மட்டிலுமே மீதம் கண்டோர் தகிக்கின்ற பஞ்சத்தின் ஐந்தாம் ஆண்டில் உண்டிருக்க விற்றழுதார் "கொடுப்பதெல்லாம் உயிரினிலும் உயர்ந்தனவா?" என்றார் யூசுப். "வருகின்ற ஈராண்டும் பஞ்சகால வறட்சியிலே மிகக்கொடிய காலமாகும்; தருகின்ற தானியத்தில் மீதம் செய்யும் சபதமே கொண்டிடுவீர்!" என்றார் யூசுப் ‘வருகின்ற ஆண்டுகளில் உணவுப் பண்டம் வாங்குதற்கு ஏதுமிலை!’ என்றார் மக்கள், இருக்கின்ற அத்தனையும் இழந்த பின்னே இருக்கின்றேன் நானென்றார் அமைச்சர் யூசுப் - - x - - |