நள்ளிரவு கடக்கும்வரை விழித்தி ருக்கும் நாயகியைக் கனிவுடனே கூர்ந்த யூசுப் பள்ளியறை போகும்வரை பொறுத்தி டாமல் பரிவுடனே தோளிணைத்து "நெஞ்ச மெல்லாம் துள்ளுகின்ற மெய்யுணர்வைச் சொல்வதற்குத் துடித்தோடி வருகின்றேன்!" என்றார் யூசுப் "நள்ளிரவு போம்வரையும் செய்த தென்ன, நவின்றிடுக!" எனநடுவே சுலைகா கேட்டாள். "என்னுடைய பெருமகிழ்வை வேண்டி டாமல், எனதுபணி என்னவென்றே வேண்டு கின்றாய்; மன்னவரின் பணியினரில் முடிவில் லாமல் வளரும்பணி என்பணியே என்ற உண்மை இன்னமும்நீ அறிந்திலையோ?" என்றார் யூசுப் எப்பணிக்கும் முடிவுண்டு - காலமுண்டு என்பதையா னறிந்துள்ளேன்; முடிவில்லாமல் இயங்கும்பணி இல்லறத்தின் பணியே!" என்றாள். "முடிவில்லாப் பணியினிலே மூழ்கும் முன்னர் முடிவுடைய பணிமுடித்து மீள்வ தற்கே நெடுநேர மாகியது; துயிலைப் போக்கி நின்பணியைத் தொடங்கிடவே நீயும் காத்தாய்! கெடுவில்லாப் பணியினுக்கே கெடுவி தித்தால் கிஞ்சிற்றும் மீறுவனோ?" என்றார் யூசுப்; "விடுங்களிதை, உங்களது பெரும கிழ்வை விளம்பிடுவீர்; விழித்தபயன் பெறுவோ"மென்றாள்! பெற்றெடுத்த தந்தையரும் பிறந்திட் டோரும் பேரருளே தருமிறையின் கருணையாலே முற்றினிலும் மகிழ்வோடு வாழும்! செய்தி முகம்மலர மொழிந்திட்ட யூசுப் கையைப் பற்றிஅவள் உடல் சிலிர்க்கும் உணர்வு பொங்கப் பரபரத்து "நாளைக்கே கன்னான் சென்று பெற்றவரை இங்கழைத்து வருவீர்!" என்று பெருமையுடன் யூசுபினைத் தழுவ லானாள்! |