தழுவுகின்ற நாயகியின் மகிழ்ச்சி கண்டு ‘சற்றேநீர் பொறுத்திடுக!’ என்றார் யூசுப். நழுவிநின்ற சுலைகாவோ முகம் கடுத்து "நாள் பார்த்து அழைத்திடவா பொறுத்திருக்க? கொழுந்தரையும் மாமனையும் கூட்டி வந்து குழந்தைகளைக் காட்டிடுதல் வேண்டும்" என்று அழுபவளாய் தழுதழுத்தக் குரலிற் கூறி அப்பாலே நகர்ந்திட்டாள், வியந்தார் யூசுப். "கால்நூற்று ஆண்டினுக்கும் முன்னி ருந்தே காணாமற் பிரிந்தவர்கள் காண்பதற்கு நாள் பார்த்தா காத்திடுவேன்? எனது பெற்றோர் நலம்பார்த்தே அழைத்துவரல் வேண்டும்!" என்று கால்பார்த்துப் பேசுகின்ற அமைச்சர் யூசுப் கண்பார்த்தாள், கலங்குவதை அவளும் பார்த்துத் தோள்சாய்த்துத் துவண்டிட்டாள்; துடிக்கும் நெஞ்சம் சுகம்காண அணைத்தபடி மஞ்சம் சேர்த்தார்! அறிந்திட்டச் செய்தியதில் மெய்யும் பொய்யும் அறிவதற்கா காத்திருக்கச் சொன்னீர்?’ என்றாள். ‘தெரிந்திட்ட அத்தனையும் மெய்யே யாகும், தெரிவித்தோர் என்றனுக்கே தெரிந்தோ ராவர்! புரிந்திட்டேன் நானவரை, அவர்கள் என்னைப் புரியாமல் போய்விட்டா! ரென்றார் யூசுப் "அறிந்தவரே என்றிட்டால் நமது இல்லம் அழைத்துவரக் கூடாதா?" என்றும் கேட்டாள். ‘வந்தவர்கள் என்றனையே புரிந்தா ராயின் வாராமல் தானியமும் வாங்கி டாமல் வந்தவழி போயிருப்பார், எனது பெற்றோர் வாழுகின்ற செய்தியையும் அறியமாட்டோம்! தந்தையுடன் சோதரரும் விரைவில் நம்மைச் சந்திக்கத் தக்கவழி செய்தேன்!’ என்று விந்தைமிகும் கதையாகச் சொன்னார் யூசுப்; ‘விரைவாகச் சந்தித்தால் போதும்!’ என்றாள். |