பக்கம் எண் :

290


"எங்களிலே ஒவ்வொருவர் சுகத்தினையும்

      கேட்டறிந்து, இதயம் ஒன்றி

உங்களது உடல்நலத்தில் ஒவ்வொன்றும்

     வினவியதும், உறவோர் போல

இங்குள்ள நம்மவர்கள் அனைவரையும்

     அங்குவந்து இருக்கச் சொல்லி

சங்கைமிகச் செய்திட்டார்!" என்றிட்ட

     யஹுதாவைத் தடுத்தான் ஷம்ஊன்.

 

"எம்முடனே புன்யாமீ னில்லாத

     காரணத்தால் இனியும் ஓர்நாள்

தம்முடனே தங்குதற்குத் தம்பியுடன்

     வரச்சொல்லி, தானி யத்தை

எம்மவரில் ஐவருக்கு மட்டிலுமே

     ஈந்திட்டார்; இனிமேல் வந்தால்

நம்மவரில் மற்றவர்க்கும் நல்கிடுவேன்!"

     என்றதையும் நவின்றான் ஷம்ஊன்.

 

"என்னருமை யூசுபினை வனத்திற்கு

     அனுப்பித்து இழந்த தேபோல்

இன்னுயிராய் இருக்கின்ற அவன்தம்பி

     மிசுர்போக இணங்க மாட்டேன்!"

என்றிட்ட தந்தையிடம் யஹுதாவும்

     லாவானும் "இன்றே நீங்கள்

சென்றிடலாம் தம்பியுடன், மிசுரதிபர்

     ஏற்றிடுதல் திண்ணம்!" என்றார்.

 

தம்பியுடன் தாம்போகச் சொல்லுகின்ற

     மைந்தரின்பால் தந்தை யாக்கூப்

நம்பிக்கை கொண்டவராய் பார்த்திட்டார்.

     பார்த்தவரை நயந்து பேசித்

தம்பியொடு தந்தையரும் அழைத்துப் போய்

     மிசுரதிபர் தயவைப் பெற்று

செம்மையொடு வாழும்வழி கண்டிடலாம்

     என் ஷம்ஊன் திட்ட மிட்டான்.