பக்கம் எண் :

291


"நடைகுலைந்து உடல் தளர்ந்து முதுமையுற்ற

      தந்தையொடு நானும் சென்று

கிடைக்கின்ற தானியத்தில் படைக்கின்ற

     உணவிலெதும் கேளேன்!" என்று

இடைமறித்து புன்யாமீன் இயம்பியதும்

     யாக்கூபு இறுக ணைத்து

‘விடைகொள்ளும் வேளையிலே பார்த்திடலாம்!’

     எனக்கூறி விழி கசிந்தார்.

 

கசிந்திட்டக் கண்ணீரில் தந்தையரின்

     உள்ளுணர்வைக் கண்ட லாவான்

‘இசைந்திட்டீ ரென்றக்கால் எல்லோரும்

     போய்வரலாம்!’ என்று கூறி

அசைந்திட்ட யாக்கூபின் உறுதியினைத்

     தன்பக்கம் ஆக்கப் பார்த்தான்,

பிசைந்திட்ட கைகளினால் புன்யாமீன்

     தந்தையரைப் பிடித்துக் கொண்டான்!

 

"மன்னாதி மன்னவரும் கைகட்டி

     வாய்பொத்தி மலைத்து நிற்கப்

பொன்னான நல்லரசு புரிகின்ற

     மிசுரதிபர் புகழைக் கேட்டால்

தன்னாலே சென்றிடுவான் புன்யாமீன்!"

     எனஷம்ஊன் சாற்றக் கேட்டு

‘இந்நாளே செல்கின்றேன், தந்தையரே

     இசைந்தக்கால்!’ என்றே ஏற்றான்.

- - x - -