பக்கம் எண் :

292


பிரிவின் தொடக்கம்

இயல்-63  

வறுமையொடு போர்நடத்தும் மிசுரி ருந்து

     வாங்கிவந்த தானியத்தின் பொதிய விழ்த்துப்

பொறுமைமிகு புன்யாமீன் கொட்டிப் பார்க்கும்

     போதினிலே பெருந்தொகையே அதனுள் கண்டு

‘தருமமெனத் தந்தனரோ’ என நினைத்துத்

     தந்தையிடம் உரைத்திட்டான், உளம்சிலிர்க்க

அருள்பெருகும் யாக்கூபு மைந்தர் தம்மை

     அழைத்திட்டார் எல்லோரும் வியந்து நின்றார்

 

‘விலையாகத் தந்தையும் பொதியுள் கட்டி

     விட்டவர்கள் மிசுரதிபர் பணியா’ளென்று

நிலையாக நின்றிருந்த யஹுதா சொல்ல,

     நேர்மைமிகு நபியாக்கூப் சினந்து நிற்க;

"மலையான இப்பிழையே செய்தோ ருங்கள்

     மைந்தர்களில் எவருமிலை!" என்றான் லாவான்.

"குலையாத வாழ்வினையே குறியாய்க் கொண்டால்

     குற்றமற்று வாழ்ந்திடுவீர்!’, என்றார் யாக்கூப்.

 

"மறதியினால் இத்தவறு நிகழ்ந்த தென்று

     மாண்புமிகு மிசுரதிபர் சமூகம் தந்து

வரஇயலா என்னிலையை விளக்கிச் சொல்லி

     வாஞ்சைமிகு சலாமுரைத்து வாழ்த்தும் கூறி

தரவிரும்பும் தானியமும் விலைக்கு வாங்கித்

     தம்பியொடு திரும்பிடுவீர்!" என்றார் யாக்கூப்;

பெறமுடியா அரியவரம் பெற்றார் போலப்

     பெருமையொடு புறப்பட்டார் மைந்தரெல்லாம்.

- - x - -