பக்கம் எண் :

294


"என்னதான் முயன்றிட் டாலும்

     எப்படி இயங்கிட் டாலும்

இன்னுமீ ராண்டு மட்டும்

     இருந்திடும் இந்தப் பஞ்சம்!

முன்னமே கனவு கண்டு

      முனைப்பொடு உழைத்த தாலே

இன்னமும் வாழு கின்றோம்!"

     என்றனர் அமைச்சர் யூசுப்:-

 

"பசியினைச் சகித்து: வாழும்

     பக்குவம் பெறுவ தற்கே

புசிப்பதைக் குறைத்து வாழப்

     போதனை புரிந்தேன்! நாட்டில்

பசியினால் ஒருவ ரேனும்

     பலியெனச் சொல்வீ ராயின்

வசையெலாம் சுமந்து என்றன்

     வாழ்வையே அர்ப்ப ணிப்பேன்!"

 

உணர்ச்சியின் சிதற லாக

     உதிர்ந்திடும் அமைச்சர் வார்த்தை

மனத்தினுள் பிளந்து செல்ல,

     மக்களும் அதிர்ந்து நிற்க;

கணத்தினில் மன்னர் கோமான்

     கலங்கியே எழுந்து நின்றார்

‘நினைத்ததைச் சொல்வீர்!’ என்று

     நெருக்கினார் அமைச்சர் யூசுப்.

 

"தவித்திடும் மக்கட் கெல்லாம்

     தானியக் களஞ்சி யத்தில்

குவித்திருக் கின்ற வற்றைக்

     கொடுத்திடில் குற்றம் சொல்வோர்

எவருமே இருக்க மாட்டார்!"

     என்றனர் மன்னர் "வேறு

எவரிடம் தருவ தற்கு

     இவையெலாம்!" என்றார் யூசுப்.