"வீட்டிலே பஞ்சம் வாட்ட வீதியில் தானம் செய்யும் காட்சியாய் வேற்று நாட்டார் களஞ்சிய தானி யத்தை மூட்டையாய் கட்டிச் செல்ல விற்பதை முடித்து விட்டு, நாட்டினர் மட்டும் கொள்ள நல்கிட" ஒருவர் சொன்னார். "விருந்தினர் பசித் திருக்க வீட்டினர் உண்ணத் தந்தால் பொருந்துமோ, என்ப தைத்தான் புரிந்திடல் வேண்டும்! நோயால் வருந்துவோர் மருந்து வேண்டி வந்திடில் மருத்து வர்கள் பிறந்தவர் மற்றோர் என்று பிரிப்பரோ?" என்றார் யூசுப். "வறியவர் வேண்டும் போது வழங்கிடச் சேர்த்து வைத்தோர் உரியவர்-அல்லார் என்று ஒதுக்குதல் முறைமை யல்ல; சிறியவர்-பெரியோர் என்றோ, தீயவர்-நல்லோ ரென்றோ பரிதியும் மதியும் நம்மில் பார்க்குமோ?" என்றும் கேட்டார் "இருப்பவை யாவும் தான மிட்டிட விரும்பு வீரேல் மறுப்பவ னல்ல, நம்மின் மன்னரின் விருப்பும் அஃதே! இருப்பவை அனைத்தும் உண்டு இன்றைய பசியைத் தீர்த்தால் வருகின்ற நாளைக் கேதும் வழங்குவோ ருண்டோ?" என்றார். |