பாசத்தின் தண்டனை இயல்-65 பொறுமையெனும் பெருங்கடலே பொங்கி னாற்போல் புறப்பட்ட மக்கள்தமை அமைதி செய்து பெருமைபெறும் பேரமைச்சர் நெஞ்சி னுள்ளே பீதியெனும் பேய்க்காற்று சுழன்று வீச, அருமைமிகும் தந்தையரை அருகில் வைத்து அவர்பணியே ஆற்றுகின்ற அரிய பேற்றைத் தருகவென இறைவனையே வணங்கி வேண்டி தலைதாழ்த்தி வீற்றிருந்தார், சுலைகா வந்தாள். "கடன்தீர்க்கும் நோக்கினிலே அவ்வப் போது காட்டுகின்ற முகத்தினிலே களிப்பைக் காணேன், கடன்பட்டார் களைப்போடு காணு கின்றீர்; கப்பிவிட்ட கவலையினைச் சொல்வீர்!" என்றாள். "கடன்பட்டே கலங்குகிறேன், எனது பெற்றோர் காணும்வரை எவரிடத்தில் கடனைத் தீர்ப்பேன்? உடன்பிறந்த சோதரரும் திரும்ப வில்லை உள்ளத்தின் தவிப்பிதுவே!" என்றார் யூசுப். "பெற்றவரைப் பிறந்தவரைக் காணும் ஆவல் பெற்றதினால் தவிக்கின்ற தவிப்பை, நீங்கள் பெற்றெடுத்த மைந்தர்களும் பெறவே செய்தால் பிழையாகத் தோன்றாதோ?" என்று கேட்டு, மற்றவரை தவிக்கவிடும் எவரும், வாழ்வில் மற்றவர்காய் தவிப்பதுதான் நீதி!" என்று சுற்றினிலும் பார்த்தபடி யூசுப் தோளில் தொங்கிட்டாள், கனிவுடனே அணைத்துக் கொண்டார். |