"நாட்டினுக்குப் பேரமைச்சர் என்றிட் டாலும் நாட்டவரை ஆட்டிவைப்போ ரென்றிட்டாலும் வீட்டினுக்கு நானேதான் அமைச்ச ரென்று விளங்காமல் போயிற்றோ?" என்று கேட்டாள்; ‘வீட்டினுக்கு அமைச்சல்ல, அரசி என்று விளையாடும் என்மகனே சாட்சி சொல்வான்; ஆட்டுவித்தால் ஆடுகிறேன்!, என்றார் யூசுப், ‘ஆட்டாம லிருந்தக்கால் போது’ மென்றாள். "வேண்டியவர் வேண்டாதார் என்றில் லாமல் வேண்டுவதைச் செய்கின்ற பரந்த உள்ளம் பூண்டிருக்கும் அதிபதியே, உங்கள் வீட்டில் புகுந்துள்ள எம்குறையும் போக்கு தற்கு வேண்டுகிறோம்!" என்றிட்டாள் சுலைகா, அந்த வேளையினில் அங்கு வந்த தோழி, யாரோ காண்பதற்கு வந்துள்ளார் என்று சொன்னாள் காத்திருந்தாற் போல் யூசுப் விரைந்து சென்றார். வந்திருப்போர் எவரென்று காணும் முன்னே வளர்ந்திருக்கும் நம்பிக்கை உணர்த்த லாலே வந்திருப்போர் சோதரரே என்று தேர்ந்து வாஞ்சைமிகு தன்னுணர்வைப் பதுக்கி வைக்க சிந்தித்தே சென்றிட்டார், மூத்த வர்க்குத் தெரியாமல் கன்னானில் வாழ்ந் திருக்கும் தந்தையரை அழைத்திடவும் திட்ட மிட்டுத் தலைவாசல் வரைவந்தார், ஷம்ஊன் கண்டார். கண்டுவிட்ட ஷம்ஊனின் கரங்கள் பற்றி ‘களைப்பாக இருப்பதென்ன?" என்றார் யூசுப், ‘கொண்டுசென்ற தானியத்தின் பொதியி னுள்ளே கொடுத்திட்ட தொகை முழுதும் இருக்கக் கண்டு கொண்டுவந்தோம் அப்படியே!" என்றான் ஷம்ஊன் ‘கொடுங்களதை!’ என்றபடி கூர்ந்துநோக்கி ‘அன்றுவந்த மற்றவர்கள் வராத தென்ன? அனைவர்களும் நலந்தானே!’ என்று கேட்டார். |