‘எல்லோரும் வந்துள்ளோம், அவர்க ளெல்லாம் இருக்கின்றார் விருந்தினரின் விடுதி தன்னில் ‘சொல்லிவிட்டுச் சென்றபடி புன்யா மீனின் துணையாக மற்றவரும் வந்ததாலே இல்லையென்று சொல்லுகிறார், எல்லோ ருக்கும் ஈந்திடுவீர் தானியமே!’ என்றான் ஷம்ஊன். நல்லதிதோ நாமுமங்கே செல்வோ’மென்று நடந்திட்டார் பேரமைச்சர், தொடர்ந்தான் ஷன்ஊன். தனைப்பெற்ற அன்னையரே ஈன்ற ளித்த தம்பியினைக் காணுங்கால் பொங்கும் ஆர்வம் தனைக்காட்டிக் கொடுத்திடுமோ, அன்றி தன்னை தன்தம்பி புரிவானோ என்று அஞ்சித் தனிமையிலே அழைத்தவனைத் தழுவிப் பார்க்கத் தக்கவழி ஆய்ந்தபடி நடந்த யூசுப் இனிமைதரும் பேருணர்வில் மிதந்த வாறு எழில் மிகுந்த மாளிகையுள் நுழைய லானார். ஏற்றமிகு மிசுரதிபர் வேற்று நாட்டார். இருக்கின்ற மாளிகையுட் சென்றபோது ஆற்றல்மிகு காவலர்கள் அணிவகுத்தார் ஆங்கிருந்த அனைவருமே எழுந்து நின்றார்! போற்றும்நபி யாக்கூபின் புதல்வர் பக்கம் போய்நின்ற அமைச்சருக்கு புன்யாமீனின் தோற்றமெதும் தெரியாமல் திகைத்த போது தோள்சுட்டித் தம்பிஇவ னென்றான் ஷம்ஊன். கணநேரம் தம்பியினைக் கூர்ந்த யூசுப் கண்கலங்கிப் போகுமென முகம் திருப்பி "உணவெல்லாம் உண்டீரா, உங்கள் தந்தை உடல்நலமா யுள்ளனரா?" என்று கேட்டார் "நினைவெல்லாம் வருவதற்கே, முதுமை யுற்ற நிலையாலே இயலாமை அடைந்த தந்தை மனமார்ந்த வாழ்த்தினையும் சலாமும் கூறி வந்திடவே பணித்திட்டார்" என்றான் லாவான். |