‘என்னுடைய சலாத்தினையும் தந்தையார்க்கு இயம்பிடுக!’ என்றிட்ட பேரமைச்சர்; ‘இன்றிரவு என்னோடு நீவி ரெல்லாம் இருந்துணவு உண்டிடுவீர்! என்றும் சொன்னார். ‘நன்றிமிக’ என்றிட்டான் ஷம்ஊன்; நீங்கள் நலம்பெறுக!’ என்றிட்டான் புன்யா மீனும் நின்றிருந்தோர் வியந்திடவே, அமைச்சர் யூசுப் நெஞ்சாரத் தம்பியினைத் தழுவ லானார்! காணாமற் போனவரைக் கண்டாற் போலும் காத்திருந்த காதலர்கள் பிணைந்தாற் போலும் நாணாமல் இருவருமே தழுவக் கண்டு- நல்லுணர்வு கண்ணீராய்ச் சுரக்கப் பார்த்து தோணாத உண்மையினைத் தேடிப் பார்க்கும் சோதரர்கள் லாவானும் யஹுதா ஷம்ஊன் தானாக ஏதோதோ நினைக்கப் பார்த்துத் தம் தவறை யுணர்ந்திட்டார் அமைச்சர் யூசுப் மூடிவைத்தத் தன்னுணர்வு திறந்த தாலே முகம் மறைக்கும் பேரமைச்சர் யஹுதா நோக்கி ‘ஓடிவிட்ட என்தம்பி தோற்றத்தோடு உம்தம்பி புன்யாமீன் இருக்கக் கண்டு வாடிநின்ற என்துயர வெள்ளத் திற்கே வடிகாலாய் அணைத்திட்டேன்!’ என்றார் யூசுப் ‘தேடிநின்ற மூத்தவரின் அணைப்பாய் எண்ணிச் சிலிர்த்திட்டேன்!’ என்றிட்டான் புன்யாமீனே! "உடன்பிறந்த இளையவனின் தோற்றம் கண்டு உன்றனையே அணைத்திட்டேன்; அணைப்பினூடே உடன்பிறந்த மூத்தவரின் நினைவு தோன்ற உன்னுள்ளம் சிலிர்த்திட்டாய்; இருவர் நோக்கும் தடம்பிறழ்ந்து போகாமல், ஒன்றை யொன்று சார்ந்திடவும்-தழுவிடவும் பணித்த தெய்வம் இடம்மாறி வாழ்பவரை ஒன்று சேர்க்க இறைஞ்சிடுவோம்!" என்றபடி அப்பால் சென்றார். |