பெருமைமிகும் நல்லமைச்சர் நகர்ந்த போதில் பேச்சின்றிப் பின் தொடர்ந்த புன்யா மீனே தருமமிகும் *மிசுரதிப, எனது தந்தை தவவாழ்வின் முதிர்ச்சியினை எய்தி னாலும்- பொறுமைமிகும் பேருள்ளம் படைத்திட் டாலும் போகவிட்ட எனைக்காணத் தவித்தி ருப்பார்; கருணையொடு தானியமே மிகுதம் தந்து கடிதினிலே திரும்புதற்கு அருள்வீர்!" என்றான். "வேண்டியவ ரென்பதினால் தானி யத்தை விரும்பும்வரை வழங்கிடவும் முடிந்தி டாது, வேண்டாதா ரென்றிடினும் இல்லை என்று விரட்டுதற்கும் இயலாது; வேற்று நாட்டார் வேண்டிவரும் போதிலொரு முறையே விற்க வேண்டுமெனும் விதியினையே வகுத்த நானே மீண்டும்வரும் ஒருவருக்கே மேலும் தந்தால் மிகப்பெரிய தவறலவோ?" என்ற யூசப்: முன்வந்த மூத்தவரில் ஐவ ருக்கு முறையாக தானியமே வழங்கிப் பின்னர் உன்னோடு வந்திட்டால் மற்ற வர்க்கும் உரியபடி தருகின்றேன் என்றும் சொன்னேன்; சொன்னதுபோல் வந்திட்டீர், சொன்ன தேபோல் சுமக்கின்ற அளவுக்கு மற்ற வர்க்கும் இன்றைக்கே தரச்சொல்வேன்;விடியுமுன்னே எல்லோரும் புறப்படலாம்!"என்றும் சொன்னார். * நபியூசுபை மிசுர்மக்கள் தம் நாட்டின் முழு அதிகாரமும் படைத்த அஜீஸ் என்றே அழைத்து வந்தனர். யூசுப் என்ற பெயரை மன்னர்கூட பயன்படுத்தவில்லை. முந்தைய அமைச்சர் அஜீஸின் பெயராலேயே யூசுபையும் அழைத்தனர். குர் ஆன் 12:78-88 வசனத்தில் அவரது சகோதரர்கள் ‘அஜீஸ்’ என்றே அழைத்ததாக இறைவனே கூறுகிறான். குழப்பத்தைத் தவிர்க்கவே, அதிகாரம் படைத்தவர் என்ற பொருளில் கூறப்படும் அஜீஸையே அதிபர் என்று குறிப்பிட்டுள்ளோம். |