ஒன்றிரண்டு நாளேனும் உடனிருக்க ஒப்பாத உடன்பி றந்தோர் கொண்டுசெல்லும் தானியத்தின் மூட்டையினைத் தன்னில்லம் கொண்டு சேர்க்க நின்றிருந்தக் காவலரைப் பணித்திட்ட பேரமைச்சர் நிமிர்ந்து நோக்கச் சென்றிருந்த சுலைகாவோ, விருந்துண்ண அழைத்திடவே சென்றார் பின்னே. சுவைமிக்கப் பல்லுணவும் பரிமாறி உண்ணவைக்கும் சுலைகா நோக்கி ‘இவைபோன்ற நல்லுணவை இதுவரையும் உண்டதிலை!’ என்றான் ஷம்ஊன் எவையதிகம் விரும்பிடினும் கேட்டுண்க!’ என்றமைச்சர் இயம்பக் கேட்டு சுவைபலவாய் இருந்திடினும் விரும்பாத தில்லை!"யெனச் சொன்னான் லாவான். "வருந்தவைக்கும் இப்பஞ்சம் வருமுன்னே இந்நாட்டார் வாழ்தற் காண மருந்தாக உண்ணவைத்து விருந்தெல்லாம் தடைசெய்தோர் மனமி ரங்கி வருந்திவரும் பிறநாட்டார் எவரெனினும் விருந்தளிக்க வகையே செய்து விருந்துணவு எங்களுக்கும் கிட்ட வைத்தார்!" எனச்சுலைகா மெள்ளச் சொன்னாள். உண்ணுவதும், உறங்குவதும் உயிர்காக்கும் கடமைக்கே உரிய தல்லால் உண்ணுதற்கே வாழ்வதெனும் உணர்ச்சியினை ஒடுக்கும்வழி யுணர்ந்த தாலே எண்ணுதற்கும் இயலாதக் கொடும்பஞ்சம் தாங்கிடவே இயன்ற தென்னும் உண்மையினை யுணர்ந்திடுவீர்!" என்றமைச்சர் உருக்கமொடு உரைக்க லானார்: |