‘பசியினுக்கு அல்லாமல் ருசியினுக்குப் புசிப்பதெல்லாம் பழைமை யாக்கிப் புசிப்பதற்குக் கிடைத்தாலும் உண்பதற்கு முடியாத புதுமை செய்தே வசித்திருக்கப் பயின்றிட்டோம்; இதனாலே பசியொடுக்கி வாழ்வ’தாக இசைத்திட்ட அமைச்சரிடம் விடைகோரி அனைவருமே எழுந்து நின்றார். "மறப்பதற்கே இயலாத மெய்யன்பும், நல்விருந்தும் - மனநி றைவும்; பெறற்கரிதாய் போய்விட்ட தானியமும் எமக்களித்துப் பெருமை செய்த சிறப்புமிகு மிசுரதிப, நும்முதவி அத்தனையும் சிந்தை சேர்த்துப் புறப்படவே அனுமதிக்க வேண்டுகிறோம்!" என்றிட்டான் புன்யா மீனே. "பொன்னொளியே பொங்குகின்ற பின்னிலவு பொழிவதனால், புலரும் முன்னே இந்நகரைக் கடந்திடவே புறப்பட்டீர் என்றக்கால் இரவின் முன்னே நின்பதியை நெருங்கிடலாம்!" என்றிட்ட பேரமைச்சர் நெடுமூச் சிட்டு ‘கண்துஞ்சிச் சென்றிடுவீர்!’ எனக்கூறி விடைதந்தார் கண்க ளாலே! வேறு கண்ணுறங்கும் ஏவலரை எழுப்பி விட்டுக் கட்டிவைத்த ஓட்டகங்கள் அவிழ்த்து விட்டுக் "கொண்டுசெல்லும் தானியத்தின் பொதியை ஏற்றிக் குளிர்காற்று வீசுகின்ற இரவி னூடே சென்றிடுவோம் களைப்பின்றி!" என்றான் லாவான், "சிறிதேனும் துயின்றெழுவோம்!" என்றான் ஷம்ஊன் "உண்டகளைப் பாற்றாமல் பயணம் செய்ய ஒண்ணாது!" என்றிட்டான் புன்யா மீனே. |