"சிந்தைநிறை இபுறாஹிம் நபியின் பேரர் செழுங்குணத்து யாக்கூபின் செல்வ மைந்த, உந்தனுக்கு ஒன்றுரைப்பேன், பஞ்ச கால உணவினுக்கு அலையாமல் நீவி ரெல்லாம் எந்தனது விருந்தினராய் இந்த நாட்டில் இருந்திடவே இசைந்திட்டால் தந்தை யோடு வந்திடுவீர் விரைவினிலே, மிசுரின் மக்கள் வரவேற்று மகிழ்ந்திடுவர்!" என்றும் சொன்னார். "மற்றவர்கள் பசித்திருக்கும் கொடிய நாளில் மகிழ்ந்திருக்கும் பிறநாட்டில் பெயர்ந்து வாழப் பெற்றவரே மறுத்திடுவார், ஏற்றிட் டாலும் பீதிகொண்டு மற்றவரும் புகுவார் இங்கே! வற்றிவிட்ட வளவாழ்வு மீண்ட பின்னே வருகின்றோம் தந்தையுடன்" என்று சொல்லி சுற்றிநின்ற சோதரரை ஒருகண் ணோக்கத் தோன்றலரைப் பணிந்திட்டான் புன்யா மீனே! பணிந்துநின்ற சோதரனை அருக ழைத்துப் பணியாளர் இருவரினைக் கூர்ந்து நோக்கிக் கனிந்த மனம் பெற்றிட்ட அமைச்சர் யூசுப் "கன்னானின் விருந்தினர்கள் கொண்டு செல்ல மணியான தானியங்கள் வழக்கம் போன்று வழங்கிடுவீர், வழங்கியபின் விருந்துக் காக அனைவரையும் அழைத்துவர" ஆணையிட்டு அகம்மகிழத் தன்னில்லம் திரும்ப லானார்! வந்தவரைக் கண்டுவரச் சென்ற யூசுப் வாராத காரணத்தால் வருந்தி, உள்ளம் வெந்தவளாய் அங்குமிங்கும் உலாவி நின்ற வேல்விழியாள் சுலைகாவே விரக்தி கொள்ள; சிந்தையினில் பெருமகிழ்வைத் தேக்கி னோராய் திரும்புகின்ற நாயகரைக் கண்ட தேவி "வந்தவரில் உடன்பிறந்தோ ருண்டோ?" என்று வரும்போதே வினவிட்டாள் சிரித்தார் யூசுப். |