பக்கம் எண் :

305


"சிரிப்பாலே மழுப்புகின்ற வித்தை கற்றுத்     

      தேர்ந்திட்ட வித்தகரே, நீங்கள் காட்டும்

குறிப்பாலே உணருகின்ற ஆற்ற லின்றிக்    

      குழம்புகிறேன்; வந்தவரின் உண்மை ஏதும்

மறைக்காமல் கூறிடுவீர்! நீங்கள் பெற்ற     

      மகிழ்ச்சியினை என்றனுக்கும் தருவீர்!" என்றாள்;

"விரைவினிலே விருந்துண்ண வருவ ரிங்கே   

     விளங்கிடுவாய் நீயாக!" என்றார் யூசுப்

 

விருந்துண்ண வருகின்றார் என்ப தோடு    

      விருந்துக்கு வேண்டியதைச் செய்வ தற்கு

வருந்தாதத் தோழியினைக் கூர்ந்தார் யூசுப்,

      வகை வகையாய்ச் சமைத்திடவே சுலைகா சொன்னாள்

‘விருந்துண்டு செல்லும்வரை வேறு ஏதும்   

      விளம்பிடவே கூடாது!’ என்றார் யூசுப்,

"வருகின்றார் விருந்தினர்கள்" என்றோர் தோழி  

      வந்திட்டாள், எல்லோரும் விரைந்து சென்றார்   

 

வந்தோரை வரவேற்ற அமைச்ச ருக்கு      

      வாழ்த்துரைத்த ஷம்ஊனின் கரங்கள் பற்றித்

‘தந்தனரா தானியங்கள்?’ என்று கேட்டுத்     

      தன்தம்பி புன்யாமீன் அருகிற் சென்று

"விந்தைமிகு அற்புதங்கள் இந்த நாட்டில்       

      வெகுவாக உண்டதனைக் கண்டு செல்ல

எந்தனுடன் சில நாட்கள் தங்கு வீரேல்      

      எல்லோர்க்கும் மகிழ்வாகும்!" என்றார் யூசுப்  

வேறு

 

"எங்களது தந்தையரே இங்கிருந்தார்             

      என்றக்கால் இந்த நாட்டில்         

உங்களது பேரன்பில் தங்குவதை             

      எங்களது உயர்வாய் கொண்டே     

இங்கிருந்தே வாழ்நாளைக் கழித்திடவே      

      விரும்பிடுவோம்!" என்றான் லாவான்,

‘தங்களது திருச்சமுகம் பின்னொருநாள்          

      வருகின்றோம்!’ என்றான் தம்பி.