பிறந்தவர்க்கு விடைதந்து வழிய னுப்பிப் பேரதிர்ச்சி கொண்டவராய் அமைச்சர் யூசுப் சிரங்கவிழ்த்துத் திரும்புவதை சுலைகா கண்டு திடுக்குற்று இருக்கைவிட் டெழுந்து நின்று கரங்கொடுத்து அமரவைத்து முகமே கூர்ந்து "கலக்கமென்ன கூறிடுவீர்!" என்று கேட்டாள்; பிறந்தவர்க்கு எனைமறைத்து வாழ நேர்ந்த பெருங்கொடுமை நினைத்திட்டேன்!" என்றார் யூசுப். மறைந்திருக்கும் மர்மத்தைப் புரிந்தி டாமல் மலைத்திருக்கும் என்னுள்ளத் தவிப்பு யாவும் உரைப்பதற்கு நினைத்திட்டேன், அதுவே உங்கள் உள்ளத்தை வருத்துவதாய்க் கூறு கின்றீர்; நிறைவாழ்வு பெற்றிருக்கும் நிலையில் இன்னும் நீரெதற்கு மறைந்திருக்க வேண்டும்?" என்றாள்; "இறையவனே திரையிட்டு மறைக்கும் போது எப்படியா னியம்புவது?" என்றார் யூசுப். "வளருகின்ற பருவத்தில் பிரிந்த என்றன் வடிவத்தின் மாற்றத்தைப் புரிந்தா ரில்லை; வளர்ந்திட்ட அவர்களது தோற்றம் ஏதும் மாறாத தால்நானே புரிந்து கொண்டேன்; உளம் நிறைந்த ஆவலுடன்-உள்ளுணர்வின் உந்துதலால் உடன்பிறந்த புன்யா மீனின் நலம்காண நினைத்திட்டேன், அவனும் வந்தான்; நான்வேறு அவன்வேறாய் நடித்தோம்!" என்றார். "முதுமையுற்ற என்றனுக்கே இளமை தந்து, முத்தான மைந்தருக்கு அன்னை யாக்கிப் புதுமை செய்த இறைவனிடம் இருகை ஏந்திப் போனவர்கள் திரும்பிவர வேண்டி நிற்போம்; இதுவரையும் பிரித்துவைத்த அவனே, மீண்டும் இணைத்திடுவான் பொறுத்திடுக!" என்றாள் தேவி, "அதுவரையும் நெஞ்சுணர்வை அடக்கி யாளும் ஆற்றல்பெற முயல்கின்றேன்!" என்றார் யூசுப். |