பக்கம் எண் :

307


"சிறுமையிலும் வறுமையிலும் பொறுமை காத்துத்,

      திடநெஞ்சங் குலையாமல் கடமை காத்து;

மறுமையிலும் இம்மையிலும் பெருமை சேர்க்கும்

      மாசற்ற வாழ்வுக்கு விளக்க மாகும்   

அருமை மிகும் செயலாற்றல்-அடக்கம் யாவும்  

      அடைந்திட்ட ஆருயிரே, உணர்வை மாற்றிப்

பொறுமையுடன் துயின்றிடுக! துன்ப மெல்லாம்  

      போக்கிடுவான் இறைவ" னென சுலைகா சொன்னாள்.

 

படுக்கையிலே புரண்டிட்டார், துயில்வார் போன்று

      பாவனையும் புரிந்திட்டார்; விழிகள் பொத்திக்

கிடக்கையிலே சுலைகாவின் நிலையைக் காண   

      கீழ்கண்ணால் நோக்கிட்டார்; சீரில் லாமல்

விடுகின்ற மூச்சினிலே அவளும் தன் போல்      

      விழிபொத்தி நடிக்கின்றாள் என்று ணர்ந்து.

"விடியட்டும், நம்வாழ்வை விடிய வைத்து        

      விலகட்டும் துயரங்கள்!" என்றார் யூசுப்.

 

"தூங்குபவர் போலெனையே தூங்க வைக்கத்      

      துணிந்திட்டீர், தூக்கத்தில் பேசு வார்போல்

நீங்காத நள்ளிரவை நினைவால் நீக்க           

      நினைத்திட்ட நாயகரே, உமக்கும் முன்னே

தூங்குகின்ற பழக்கத்தை ஓர்நா ளேனும்          

      சுவைத்தேனா; துயர்கொண்ட இந்நாள் மட்டும்

தூங்கிடவும் முடிந்திடுமோ; துடிக்கும் நெஞ்சம்    

      சோர்ந்திடுமோ?" எனச் சுலைகா அணுகிக் கேட்டாள்.  

 

நாயகனின் உள்ளுணர்வை நவின்றி டாமல்      

      நாயகியும் பெற்றிடுதல் இதயம் ஒன்றித்

தோய்ந்ததற்குச் சான்றாகும் என்றுதேர்ந்துத்       

      துயர்மறந்து சுலைகாவின் கரங்கள் பற்றி

"நேயமிகும் நாயகியே, விடியும் முன்னே          

      நிகழ்வதனை இயம்பிடவா?" என்றார் யூசுப்,

மாயமென அவள் நினைக்க வாயிற் காப்போன்   

      மணியொலித்து வரக்கண்டு மலைக்க லானாள்.