பக்கம் எண் :

308


"விருந்துண்டு சென்றவரைக் காவல் வீரர்               

      விலங்கிட்டுக் கொண்டுவந்தா!" ரென்றான்காப்போன்;

பெருந்துன்பம் விளைந்ததென சுலைகா மட்டும்       

      பீதியினால் நடுங்கிட்டாள், அமைச்சர் யூசுப்

வருந்துன்பம் அறிந்தவர் போல் அமைதி யோடு      

      ‘வருகின்றே’ னென்றெழுந்து வாயிற் நோக்கி   

விரைந்திட்டார் சுலைகாவும் தொடரக் கண்டு           

      ‘வேண்டாம் நீ’ என்றிட்டார் வியந்து நின்றாள்.   

 

சிரங்கவிழ்த்துச் சோதரர்கள் நிற்கக் கண்டு          

      ‘தீமையென்ன செய்திட்டீர்?’ என்றார் யூசுப்,

கரங்களிலே விலங்கிட்ட புன்யா மீனோ            

      காலடியில் வீழ்ந்திட்டான்; காவல் வீரன்   

"தரங்கெட்டோர் வழியினிலே களவு செய்து          

      தானியத்தின் மூட்டையிலே தங்கக் கோப்பை

மறைத்திட்டார் சோதித்து பிடித்தோ!" மென்றான்.   

      மலைத்தவராய் மூத்தவரைப் பார்த்தார் யூசுப்.

 

"தவறிழைக்க நாணாமல் தலைக விழ்த்துத்            

      தரைதாழ்த்து நிற்பவர்காள், இந்தக் குற்றம்

எவரிழைத்த போதினிலும் இந்த நாட்டில்            

      இன்னல்தரும் தண்டனைக்கு உரிய தாகும்!

இவரிழைத்த தவறுக்கு உங்கள் நாட்டில்          

      இடுகின்ற தண்டனையை இயம்பு வீரேல்   

தவறுக்கு உரியதனைத் தருவதற்குச்              

      சாற்றிடுவோம்!" என்றிட்டார் பேரமைச்சர்.

 

"செய்யாத பெருங் குற்றம் செய்தோ னென்ற        

      தீராதப் பழியினையே சுமந்து வாழச்     

செய்யாமல் என்தலையே கொய்வ தற்குச்         

      செய்திடுவீர்!" என்றழுதான் புன்யா மீனே.

"செய்யாத குற்றத்தைச் செய்தா யென்று            

      செப்பிடுவோர் எவருமிலை; தங்கக் கோப்பை

மெய்யாக நின்பொதியில் மறைத் திருக்க          

      மீட்டதுவும் பொய்தாமோ?" என்றார் யூசுப்.