பக்கம் எண் :

309


"என் பொதியில் கண்டெடுத்தா ரெனினும், அங்கு   

      எவ்வாறு வந்ததென அறியேன், குற்றம்

என்றலையில் சுமத்திடவே சதியே செய்தோர்    

      எவரென்றும்-ஏனென்றும் அறிய மாட்டேன்!

இந்நிலையில் பெற்றவர்கள் என்னைக் கண்டால்  

      இழிவிதனைத் தாங்காமல் துடித்துப் போவார்,

அந்நிலையைக் காணாமல் என்னைக் கொல்ல    

      ஆணையிட வேண்டுகிறேன்!" எனத் துடித்தான்.  

வேறு

 

"எத்தவறு செய்திடினும் அத்தவற்றின்              

      தண்டனையை ஏற்ப தல்லாமல்       

இத்தவற்றை மறைத்திடவே மரணத்தை           

      ஏற்பதுபோல் ஏய்க்க வேண்டாம்!     

இத்தவற்றைச் செய்தவர்க்கு உம் நாட்டின்        

      தண்டனையை இயம்பக் கேட்டால்     

மெத்தனமாய் நிற்பதென்ன?" என யூசுப்        

      மற்றவர்பால் மீண்டும் கேட்டார்.       

 

"எவர் பொருளைக் களவிடினும் அவரிடத்தில்     

      அடிமையராய் இருக்க வைத்தல்     

தவறிழைக்கா எங்களது சமுதாயப்              

      பெருவழக்கம்!" என்ற ஷம்ஊன் :     

"இவனிழைத்த களவுக்கு என்றனையே             

      அடிமையென ஏற்றுக் கொண்டே      

தவமிகுந்த எம்தந்தை துயர் தவிர்க்க           

      வேண்டு" மெனத் தாழ்ந்து கேட்டான்.

 

"இவனுக்கு மூத்தவனும் * களவிட்டு                

      மறைத்ததுபோல் இவனே செய்த      

தவறுக்கு எங்களையும்தலைகுனியச்               

      செய்திட்டான்; தயவாய் எம்மில்      

எவர்க்கேனும் தண்டனையே ஈந்திடுக             

      ஏற்கின்றோம்; எங்கள் தந்தை           

இவன்மீள வாக்குறுதி பெற்றிட்டார்               

      எம்மிடத்தில்" என்றான் லாவான்      

 

     * யூசுபை  வளர்த்தவள்.  அவர்  மீது திருட்டுக்  குற்றம்  கூறி  அடிமை கொண்டதைக் குறிப்பிடுவது. [பக்கம் 51]