"உன்னுடனே பிறந்தவனும் களவிட்டு அடிமையுற்ற ‘உண்மை’ போல என்னிடமே களவிட்ட நீயேதான் அடிமையென இருக்க வேண்டும்!" என்றிட்ட அமைச்சரினை ஏறிட்டுப் பார்த்திட்ட இளவல், தன்னைக் ‘கொன்றிட்டால் நல’ மென்று கூறிட்டான் மற்றவர்கள் கூசி நின்றார். வேறு "தண்டனை பெற்றவர் அனைவ ருமே தவறைச் செய்தவர் என்பதுவும் தண்டனை யடையார் வாழ்வினிலே தவறே செய்யார் என்பதுவும் உண்மையாய் கொண்டால் பொய்யாகி உலகம் தூற்றும் கதை யாகும்; என்பதில் நாமே சாட்சிகளாய் இருப்போம்!" என்ற பேரமைச்சர் : "அவரை விதைத்துத் துவரையினை அறுவடை செய்திட விரும்புவதும் தவறைச் செய்தே நன்மையினைத் தந்திடச் சொல்வதும் சமமாகும்! தவறுக் குரிய தண்டனையைத் தவறே செய்யார் பெறுவதெனில் எவரே ஏற்பர்? இப்பிழையே இயற்றா திறையே எமைக் காப்பான்!" என்றே அமைச்சர் இயம்பியதும் இனிமேற் செய்வதை யறியாமல் நின்றே தவித்த சோதரரை நிமிர்ந்தே நோக்கிய பேரமைச்சர் : "சென்றே வருவீர்; தந்தையிடம் தெரிந்ததைச் சொல்லித் தேற்றிடுவீர்!" என்றே உரைத்து புன்யா மீன் இருகை பற்றி ஏகினரே! |