விடிவும், முடிவும்! இயல் 66 தன்னுடைய தானியத்தின் மூட்டையினுள் எப்படியோ தங்கக் கிண்ணம் கண்டெடுத்து களவெடுத்த குற்றத்தின் காரணமாய் அடிமை யாக்கிக் கொண்டிட்ட மிசுரதிபர் குடும்பத்தில் ஒருவனைப்போல் கொண்டு போற்றக் கண்டிட்ட புன்யாமீன் வியப்புற்றுக் கட்டளைக்குக் காத்தி ருந்தான். ஒன்றிரண்டு நாட்களிலே தன்னிலையை முற்றினிலும் உணரக் கூடும் என்றிருந்த புன்யாமீன் ஈரிரண்டு நாட்களினை இழந்த பின்னும் தன்னடிமைப் பணிஎதையும் தாராத அமைச்சரினை தயவாய் நோக்கி "என்னடிமை ஊழியத்தை இயம்பிடுவீர்; எப்பணியும் ஏற்பேன்!" என்றான். "அடிமையென ஆகியபின் ஆணையிடும் வரையினிலும் அடக்கம் காத்தல் கடமையெனப் பேணிடுவீர்!" என்றிட்ட அமைச்சரினைக் கண்ணீர் பொங்க "உடமையினைக் கவர்ந்தவனாய் உங்கள்முகம் காணுதற்கே உள்ளம் நாணும் அடியவனைக் கள்வனென ஆக்குவித்த தெவர்சதியோ அறியேன்!" என்றான் |