பக்கம் எண் :

312


"நின்பொதியில் எம்பொருளைக் கண்டெடுத்த

      பின்னரும்நீ நிரப ராதி            

என்பதனை நம்புவர் இங்கெவரும்         

      இல்லை!"யென சுலைகா சொன்னாள்;

"உன்வரையில் தவறில்லை என்றிருந்தால்  

      நாணுவதேன்? உனது உள்ளம்   

என்னடிமை யானதிலே குறைகொண்டால்

      கூறிடுக!" என்றார் யூசுப்      

 

"அருஞ்செயலும் பெருந்தகையும் அமைந்திட்ட

      நும்மடிமை யாவ தற்குப்     

பெருந்தவமே செய்தவனாய் மகிழ்ந்திருப்பேன்;

      களவிட்ட பிழைசெய் தோனாய்

இருந்திடவே நேர்ந்தமைக்கு ஏங்கு"வதாய்

      புன்யாமீன் இயம்பக் கேட்டு,

‘வருந்துகிறேன் ஓருண்மை மறைத்ததற்கு!’

      என்றமைச்சர் மனம் துடித்தே:

 

"ஓருண்மை மறைப்பதற்கு முயன்றக்கால்    

      பொய்பலவும் உரைப்ப தற்கே

நேருவதைத் தவிர்த்திடவே இயலாது     

      என்பதனை நினைவில் கொண்டே

மீறிவிட்ட என்தவறை மறைக்காமல்     

      உண்மையெலாம் விளக்கு தற்கு

மாறிவிட்டேன் நீமட்டும் மற்றவர்க்குத்   

      தெரியாமல் மறைப்பாய்!" என்றார்,

 

"கொள்ளையிட்ட கள்வனெனக் கொள்ளாமல்   

      மற்றவரும் கொண்டி டாமல்  

உள்ளமட்டும் அடிமையென உயிர்வாழப்

      பணித்திட்டால் உயர்வாய்க் கொண்டு

சொல்லுமட்டும் மற்றெவர்க்கும் சொல்லாமல்

      என்நெஞ்சில் சுமந்து காத்துப்

புல்லடிமை ஏற்றிருப்பேன்!" என்றுறுதி   

      புகன்றிட்டான் புன்யா மீனே.