பக்கம் எண் :

313


‘எனைப்பெற்ற அன்னையரே உனைப்பெற்றார்

      என்பதனை இயம்பி டாமல்      

உனைப்பெற்று ஒன்றாக வாழ்ந்திருக்கக்       

      கள்வனென உரிமை கொண்டேன்!"

எனச் சொன்ன அமைச்சரினைக் கணம் நோக்கி  

      விழிபூக்க இருகால் பற்றி        

"எண்ணண்ணா, எண்ணண்ணா!" என்றழுதான்;     

      ‘என்பிறப்பே!’ என்றார் யூசுப்.  

                  வேறு

 

"பிரிந்திட்ட நாள்முதலாய் மீண்டும் காணப்       

      பெற்றிடுவோம் என்றுறுதி பெற்ற தந்தை

சொரிகின்ற கண்ணீரைத் துடைப்ப தற்குத்    

      தோன்றாதச் சோதரரே, இந்த நாட்டில்

புரிகின்ற பணியினிலும் பெற்றோர் துன்பம்  

      போக்குகின்ற அரும்பணியை இன்றே செய்யப்   

பரிவோடு வேண்டுகிறேன்!" என்று கெஞ்சிப்

      பாசமொடு அணைத்திட்டான் புன்யா மீனே.

 

அணைத்திட்டச் சோதரனை இறுகப் பற்றி

      ஆறாத மனப்புண்ணை ஆற்று தற்கு

இணைத்திட்டார் தன்னெஞ்சை அவன்நெஞ் சோடு

      இருவரது விழிவழியே பிரிவுத் துன்பம்

அணையொழுகும் நீராக நழுவிச் செல்ல:

      "அமைதியுட னிருந்திடுவாய், மீண்டும் ஒன்றாய்

இணைகின்ற நேரம்வரும்!" என்றார் யூசுப்;

      "இந்நேரம் போதாதா?" என்றான் தம்பி.

 

"உனைப்பிரிந்த துயரத்தால் உளம் துடிக்கும்

      ஒப்பரிய நம்தந்தை அஞ்சல் கொண்டு

உனைமீட்டுச் சென்றிடவே நமது மூத்தோர்

      ஓடோடி வந்திட்டார்; முடியா தென்றேன்!

பிணையாக நிற்கின்றோ மென்றார், வேறு   

      பேச்சுக்கு இடமின்றி முன்னர் செய்த

வினையாவும் விளக்கிட்டேன்; தலைக விழ்த்து  

      வேதனையால் துடித்திட்டார்!" என்ற யூசுப்: