பக்கம் எண் :

314


"உற்றவரை உறவினரை ஒதுக்கி வாழ          

      ஒண்ணாது என்பதனால் உண்மை கூறிப்

பெற்றவரை அழைத்துவர ஆணை யிட்டேன்;

      ‘பிழையாவும் பொறுத்திடவே’ வேண்டி நின்றார்!

‘முற்றினிலும் உம்செயலால் உயர்ந்த வாழ்வு

      முகிழ்ந்ததென மகிழுகிறேன்!, என்றேன், கேட்டு

சுற்றினிலும் எனைப்பணிந்தார், கனவிற் கண்ட

      தோற்றத்தைப் பார்த்திட்டேன்!" என்றும் சொன்னார்.

 

"வந்தவரை எனைக்காண வைத்தீர் என்றால்   

      வசைபாடி விட்டிருப்பேன்!" என்றான் தம்பி;

"எந்தனிடம் உனைக்காணப் பெரிதும் வேண்டி  

      ஏதேதோ கூறிட்டார், மறுத்து விட்டேன்;

தந்தையுடன் சோதரின் குடும்பத் தாரும்    

      தக்கபடி இங்குவர வாக னங்கள்   

தந்தனுப்பி வைத்துள்ளேன்!" என்றார் யூசுப்   

      தலைநிமிர்ந்து சிரித்திட்டான் புன்யா மீனே.

 

நெஞ்சத்தின் நிறைவினையே சிரிப்பாய்ச் சிந்தி

      நெகிழ்ந்திட்ட புன்யாமீன் அண்ண னோடு

மஞ்சத்தில் அமர்ந்திட்டான், அந்நே ரத்தில்

      மகிழ்வுதரும் நகைசொரிந்து சுலைகா வோடு   

வஞ்சத்தின் வாடையற்று மலர்ந்த பூவாய்

      வந்திட்ட மீஷாவை வாஞ்சை பொங்க

நெஞ்சத்தில் அணைத்திட்ட புன்யா மீனே

      நிலம்நோக்கி நகர்ந்திட்டான்; நகைத்தார் யூசுப்.

                 வேறு

 

"இங்குநான் வந்த தால்உம்                  

      மிருவர்க்கும் இடையூ றென்றால்    

இங்கிருந் தகல்வே" னென்று            

      இயம்பினள் சுலைகா, "ஏதும்     

எங்களுக் கிடையூ றில்லை!"           

      என்றனர் யூசுப்; "பின்னர்       

இங்கிருந் துங்கள் தம்பி                

      ஏகுதல் எதற்கோ?" என்றாள்.