பக்கம் எண் :

315


"அண்ணனைக் காண ஏதோ

      ஆசையாய் வந்த தாக

எண்ணியே தனிமை தந்து

      ஏகினான்!" என்றார் யூசுப்;

"பெண்ணுக்கு நாணும் அண்ணன்

     பின்பிறந் திட்டோ னென்று

என்றனுக் குணர்த்து தற்கோ

     ஏகினார்?" எனச் சிரித்தாள்.

 

‘மன்னவர் பல்லக் கோடு

     வந்துளார்!’ என்றோர் தோழி

சொன்னவ ளாக அங்கே

     தோன்றினாள், அவளின் பின்னே

"இந்நகர் எல்லைக் குள்ளே

     இறைநபி யாக்கூப் வந்தார்!"

என்றொரு காவல் வீரன்

     இயம்பினான், எழுந்தார் யூசுப்!

 

                 வேறு

 

"எந்தையுடன் சோதரர்கள் இந்நகரின்

     எல்லையினை எட்டும் முன்னே

வந்துரைக்கப் பணித்திட்டேன், இப்பொழுதே

     காவலனும் வந்தான்!"என்று

வந்திருந்த மன்னவரும் உடன்செல்ல

     மக்களெலாம் வாழ்த்தொ லிக்கச்

சிந்தைமிக பரபரக்கத் தேரேறித்

     துரிதமொடு செலுத்தச் சொன்னார்.

 

தேர்கண்ட யாக்கூபு தனதுமகன்

     முகம்காணத் தெரியு மட்டும்

நேர்நின்று நெற்றியின்கீழ் கைவைத்து

     விழிகூர்ந்தார், நிழலாய்க் கூட

ஓர் முகமும் தோன்றாமல் ஷம்ஊனின்

     தோள்பற்றி "உமது தம்பி

யாரென்று கூறிடுக!" என்றிட்டார்;

     பொறுத்திருக்க யஹுதா சொன்னான்,