வீதியினில் தேரோட, விண்வெளியில் காரோட* விரையும் மக்கள் மீதினிலே காற்றோடு பன்னீராய் மழைச்சாரல் வீசக் கண்டு "மாதவத்து யாக்கூபின் மலரடி இம் மண்பட்ட மகத்து வத்தால் சோதித்த ஏழாண்டுக் கொடும் பஞ்சம் முடிந்த"தெனச் சொன்னார் மன்னர். "வதைக்கின்ற பெரும் பஞ்சம் தீரும்வரை மிசுரல்லால் மற்றோர் நாட்டை மிதிக்கின்ற தில்லையெனும் உறுதியினால் இங்கிருந்தேன், விரைவில் கன்னான் பதிக்கென்னை அனுப்பிடுவீர்!" என்றபடி வேந்தரினைப் பார்த்தார் யூசுப் "இதுவேதான் உம்நாடு, இங்கேயே வாழ்ந்திருப்பீர்!" என்றார் மன்னர். ஓடுகின்ற தேரினிலே உரையாடும் தன்னமைச்சர் உணர்வை எண்ணி வாடுகின்ற மாமன்னர் வழிநெடுகக் காணுகின்ற மக்கள் காட்டி "நாடுகின்ற நம்விருப்பம் எதுவெனினும் நாட்டினரின் நலத்தைக் காக்கக் கூடியதாய் இருந்திடமுன் கூறியதை நினைவினிலே கொள்வோம்!" என்றார். "ஏற்றிட்ட என்றன்பணி முடிந்திட்ட பின்னரும் நான் இந்த நாட்டில் வீற்றிட்டே னென்றக்கால் பதவியினை விழைபவனாய் வெறுப்பர், மற்றோர் ஏற்றிடவே என்பணியை மாற்றிடுவீர்!" என்றிட்ட யூசுப் நோக்கி "மாற்றுதற்கு நம்மக்கள் முற்றினிலும் மறுத்திடுவர்!" என்றார் மன்னர். * காரோட:- ஓடுகின்ற கருமேகம் |