சோதரரின் தோள்பற்றித் தனைக்காணத் தந்தையரே தொய்ந்த வாறு வேதனையாய் நடந்துவரக் கண்டிட்ட பேரமைச்சர் விரையும் தேரைப் பாதையினில் நிறுத்திவிட்டு தந்தையரை எதிர்நோக்கிப் பாய்ந்து சென்று மாதவத்து நாயகரின் மலரடியில் வீழ்கையினில் மறைத்தார் மன்னர். தன்னடியில் வீழ்ந்திட்ட தனயனது திண்டோளைத் தழுவி யாக்கூப் "உன்னடியில் கதிர்மதியும் உடுக்குலமும் பணிகனவை உண்மை யாக்கி என்றனையும் உன்னிடமே சேர்த்திட்ட இறையருளை எண்ணும் போது மண்ணுலகின் சுகதுக்கம் மிகச்சிறிது!" எனயாக்கூப் மகனைப் பார்த்தார். "பெற்றவனைப் பித்தாக்கிப் பிரிந்திட்டாய் என்றாலும் பெருமை யாவும் பெற்றவனாய் நினைக்காணும் பெரும்பேற்றை தந்திட்டாய், பிறந்தோர் செய்த குற்றமெலாம் பொறுத்திடுவாய்!" என்றிட்ட தந்தையரைக் கூர்ந்த யூசுப் "பெற்றவர்க்குப்-பிறந்தவர்க்கு மறைந்திருந்த பெரும்பிழையைப் பொறுப்பீர்!" என்றார். "இப்பெரிய திருநாட்டை ஈரேழு ஆண்டுகளாய் இனிதே ஆண்டு செப்பரிய அருஞ்செயலால் எம்மக்கள் சிந்தையினில் செங்கோ லோச்சும் ஒப்பரிய திருமகனைப் பெற்றெடுத்த தவப்பெரியீர், உங்கள் வாழ்வை இப்பதியில் என்றென்றும் நடத்திடவே வேண்டுகிறேன்!" என்றார் மன்னர். |