"வல்லஇறை அனுமதிக்கும் வரையினிலும் வாழ்ந்திருக்கும் வைய கத்தில் உள்ளதெலாம் எம்பதியாய் உவந்திடுவோம்!" எனயாக்கூப் உரைக்கக் கேட்டு "சொல்லரிய பேரமைச்சாய் நல்லறிஞர் துதியூசுப் தொடர்ந்து வாழச் சொல்லிடுவீர்!" என்றிட்ட மாமன்னர் முகம் நோக்கிச் சொல்வார் யூசுப் : வேறு "இல்லாத தில்லையென வாழ்ந்தோர் தம்மை ஏதுமற்ற அடிமையராய் ஆக்கு வித்தப் பொல்லாதக் கொடும்பஞ்சம் தீர்ந்த தாலே புதுவாழ்வு பெரும்வழியைத் திறந்து வைத்து எல்லார்க்கும் விடுதலையும், இழந்து விட்ட இல்லமொடு விளைநிலமும் திரும்ப ஈந்து நல்வாழ்வு தொடங்கிடவே செய்வோம்!" என்றார் "நானுமிதை நினைத்திட்டேன்!" என்றார் மன்னர். பெற்றவரும் பிறந்தவரும் சுற்றத் தாரும் பெருமைபெற அரசவைக்கு அழைத்துச் சென்று கொற்றவரின் பீடத்தை பெற்றோர்க் கீந்து குழுமிநின்ற மக்களினை நோக்கி யூசுப்: "ஒற்றுமையைப் பற்றிடுவீர், உள்ளம் ஒன்றி உழைத்திடுவீர்-உயர்ந்திடுவீர்!" என்றார்; மக்கள் முற்றினிலும் தமைமறந்து ‘அமைச்சர் வாழ்க!’ முழங்கிடவே, அமைதிபெறப் பணித்த யூசுப்:- "கேடுமிகும் புல்லடிமை செய்ய வந்து கீர்த்திமிகும் பொதுவாழ்வு பேண வைத்துப் பீடுமிகும் பேரரசு நடத்த வைத்த பெருமைமிகு அல்லாஹ்வின் அருளைப் போற்றி நாடுகெடச் செய்யாமல் விழிப்பாய் வாழும் நன்மக்கள் பேருழைப்பைப் பெரிதும் போற்றி பாடுபடும் மக்களுக்கே இந்த நாட்டைப் பரிசளித்த பேரரசர் வாழ்க!" என்றார். முற்றிற்று. |