பக்கம் எண் :

32


பாயிரம்

கற்றவர் சிந்தையைக் கற்றிடார் கண்களைக்     

கொற்றவர் ஆண்மையைக் குடிகளின் மென்மையைப்

பற்றிப் பிணைத்திடும் பண்புறும் காதலின்      

முற்றுகைக் கிலக்காய் விட்டவர் யாவரும்       

பெற்றவர் தம்மையும் பிறந்தவர் தம்மையும்     

சுற்றமும் கொற்றமும் துறந்திடும் துணிச்சலைப்   

பெற்றிடும் உண்மையைப் பேசிடும் காதையுள்   

முற்றிலும் சிறந்ததை விளக்கிட விரும்பினேன்!   

கலையினிற் சிறந்த காவியம் வியக்கும்,         

 

மலைகளும் உருகும், மனத்தினில் நிறையும்,     

அலையெறி ஆழியும் அசையாது கேட்கும்,      

கொலைஞரும் கண்ணீர் கொட்டிடச் செய்யும்      

சிலைகளும் சிரிக்கும், சிந்தையோ சிலிர்க்கும்    

நிலையினி லாக்கும் நிகரிலா யூசுப்            

சுலைகா வாழ்வைச் சவைமிகும் தமிழில்         

நிலைத்திடச் செய்யும் நினைவே கொண்டேன்!    

 

காவியப் புலவரும் கற்பனைக் கலைஞரும்      

ஓவிய மேதையும் உள்ளம் பதித்திடும்         

ஜீவியக் காதலைச் செப்பிடும் கதைகளின்  

ஆவியாய் நின்றுபல் லாயிரம் ஆண்டுகள்

மேவிடும் பெருமையைத் தாவிடும் புதுமையைக்

கூவிடும் அருமையைக் கூறிடும் சிந்தையால்  

பூவினில் திருமறை போற்றிடும் யூசுபின்

தேவியர் சுலைகாவின் சரிதையைக் கூறுவேன்!