பன்னெடுங் காலமாய்ப் பார்மிசை எங்கணும் மின்னுமிச் சரிதையை எண்ணிலா மொழிகளில் படைத்தனர், ஆயினும் பைந்தமிழ் மொழியிலே படைத்தன ரில்லையே, படைப்பவ ரில்லையா? இருந்தனர் பாவலர், என்னிலு மிக்கவர்: இருப்பினும் எனக்கென இறைவனே வைத்தனன்! இல்லையென் றாலிதை எண்ணரும் புலவரும் சொல்லருங் கவிதையால் தொடுத்திட மறப்பரோ? இப்பெரும் பேற்றினை என்றனுக் கீந்திடும் ஒப்பரும் இறைவனின் உவப்பினை மறப்பதோ? செப்பருங் காவியம் செப்பிடும் ஆற்றலே எப்பொழு தும்எனக் கிருப்பதாய் எண்ணிலேன்! இப்பெருங் காவியம் இறைவனின் துணையினால் செப்பிடத் துணிந்தஎன் சிந்தையே ஊக்கமே கொண்டிட ஆக்கமே கொடுத்தனன்; பேர்பெறும் தொண்டியம் பதியினில் தொல்புகழ் தாங்கிடும் பெருங்குலத் திலகமாய் அருங்குணச் செல்வமாய் திருமிகும் பெருந்தகை சீர்மிகும் பண்பினன் அப்துர்ர ஹீமின்மெய் யன்பினை மறப்பதோ? எப்பொழு தும்அவன் இன்முகம் மறந்திலேன்! இம்மையும் மறுமையும் ஏற்றமாய் அவன்குலம் செம்மையே பெற்றிடச் சிந்தையால் வாழ்த்துவேன்! இப்பெருங் காவியம் இயற்றிடப் பணித்திடும் ஒப்பரும் இறைவனும் ஒப்பிடப் பணிகிறேன்! வாழிய என்பணி வையகம் வாழிய மட்டிலும் வனப்புடன் வாழியே! -சாரணபாஸ் |