"திருமணம் நடந்ததா, நடக்கவில்லையா? அவரது மனைவியின் பெயர் சுலைகாவா; ஜலீகாவா, ஆஸ்நாத்தா ?" இதனை யார் தீர்மானிப்பது ? நம்மையே தீர்மானித்துக் கொள்ள ஒரு தப்ஸிரின் ஆசிரியர் ஆலோசனை சொல்கிறார். அவர்களுக்குத் திருமணம் நடந்ததாகவும் குழந்தைகள் பிறந்ததாகவும் ஒப்புக்கொள்ளும் "காஜின், ஹக்கானி, தன்தாவி, அஹ்ஸன், ரூஹுல் மஆனி..."போன்ற குர்ஆன் விரிவுரையாளர்கள் ஒப்புக்கொண்ட சரித்திராசிரியர்களின் முடிவில், அன்வாறுல் குர்ஆன் விரிவுரை ஆசிரியருக்கு என்ன சந்தேகம் வந்தது ? இதன் மூலம் வாசகர்களுக்கு எத்தகையக் குழப்பம் ஏற்படுமென்பதை நினைத்துப் பார்க்க வேண்டாமா ? முஸ்லீம்களிடையே நடைபெறும் திருமணங்களிலெல்லாம், "யூசுப் (அலை)-வ-சுலைகா (ரலி)" என்று பழைய தம்பதிகளைச் சுட்டிக்காட்டிப் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக் கூறப்படுவதை-அதே அன்வாறுல் குர்ஆன் தப்ஸீரின் ஆசிரியர் வீட்டுத் திருமணத்தில்கூட- நாம் அறிந்திருக்கிறோம். முறையாகத் திருமணம் செய்யப்படாத தம்பதிகளின் பெயரையா நாம் சொல்லிக் கொண்டு வருகிறோம்? இனி சுலைகா என்று சொல்லாமல் ஜலீகா என்றுதான் சொல்லவேண்டுமா? நபி யூசுப் (அலை) மிசுர் செல்வதற்குமுன் அங்கிருந்த அமைச்சரை, ‘அஜீஸ்’ என்றே இறைவன் தன் திருமறையின் மூலம் நமக்கு அறிமுகப்படுத்துகின்றான். அவரது உண்மைப் பெயர் ‘கித்பீர்’ என்றும், அஜீஸ் என்பது அவர் வகித்தப் பதவிக்காகக் குறிப்பிடப்பட்ட பெயரென்றும் கூறுகின்றனர். அந்த அஜீஸின் மரணத்துக்குப் பின்னர் அவரது முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட நபியூசுப் (அலை) அவர்களை அந்நாட்டினர் அஜீஸ் என்றே அழைத்து வந்ததாகவும், இதன்படியே அவரது சகோதரர்களே அஜீஸ்’ என்று அழைத்ததாக குர்ஆன் 12:78-88 வசனங்களில் இறைவனே குறிப்பிடுகிறான். |