வரைந்திட்ட சித்திரத்தே பிரிந்துவிட்ட மனைவிமுகம் தோன்றிடவே நிலைகுலைந்து குறைந்திட்ட மனச்சுமையில் மீண்டும் துன்பம் குவிந்திடவே நெடுமூச்சு விடுக்க லானார்! பாய்ந்துவரும் பெருமூச்சில் புதிய எண்ணம் பளிச்சிடவே புத்துணர்வு பெற்ற யாக்கூப் சாய்ந்துவிட்ட நெஞ்சுரத்தின் தலைநி மிர்த்தித் தாய்தேடும் மைந்தர்களை இறுக ணைத்துக் காய்ந்துலர்ந்த தம்மிதழால் முத்த மிட்டுக் "கண்மணிகாள்! அதிவிரைவில் உங்க ளுக்குத் தாய்கிடைக்கச் செய்திடுவேன்! அழாதீர்!’, என்றார். துயர்படிந்த சேய்முகத்தில் மகிழ்ச்சி கண்டார். கண்ணயர்ந்தே உறங்குகின்ற சிறுவ ருக்குக் கதைசொல்லி விழிப்படையச் செய்ய லாமோ? உண்ணுதற்கே உணவுபெறத் துடிப்ப வர்க்கே உடைதந்தால் மகிழ்ச்சிதனை அடைவ துண்டோ? அன்னையின்மெய் யன்பினுக்கே அழுப வர்க்கே ஆறுதல்சொல் தந்தைமொழி இனிப்ப துண்டோ? என்பதிலே எண்ணமிட்ட யாக்கூப் நெஞ்சம் இல்லறத்தை ஏற்பதற்கே இணங்க லாச்சு! மறந்திடவோ மறுத்திடவோ இயலா தான மனிதகுல வளர்ச்சிக்கே. மூல மாகச் சிறந்தொளிரும் இல்வாழ்வைப் பிரிந்து வாழும் சிந்தனையை உடன்மாற்றி வென்ற யாக்கூப் இறந்துவிட்ட தம்மனைவி ‘பல்கியா’வின் இளையதங்கை ராஹிலாவைக் கைப்பி டித்துத் துறந்திருந்த இல்வாழ்வைத் தானும் பெற்றுத் துயரடைந்த மைந்தருக்குத் தாயும் தந்தார்! - -x - - |